சந்திரபாபு நாயுடு, சீதாராம் யெச்சூரியை தொடர்ந்து ஸ்டாலினுடன் சுதாகர்ரெட்டி சந்திப்பு

சென்னை: ‘‘பாஜவுக்கு எதிரான அணி உருவாக்குவதில், தேசிய அளவில் திமுக முக்கிய பங்கு வகிக்கும்’’ என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் நடந்த சந்திப்புக்கு பிறகு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சுதாகர்ரெட்டி கருத்து தெரிவித்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சுதாகர்ரெட்டி, தேசிய செயலாளர் டி.ராஜா ஆகியோர் நேற்று மாலை 5.20 மணிக்கு ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லம் வந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினர். அப்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் முத்தரசன், திமுக முதன்மை செயலாளர் டி.ஆர்பாலு, கனிமொழி எம்பி ஆகியோர் உடனிருந்தனர்.

இந்த சந்திப்பு ஒருமணி நேரம் நடந்தது. பின்னர் சுதாகர் ரெட்டி கூறியதாவது:   தேசிய அரசியல் நிலவரம் குறித்து விவாதித்தோம். பாஜ இன்று சிபிஐ, ரிசர்வ் வங்கி எல்ஐசி, வங்கி, ஒஎன்பிசி போன்ற நிறுவனங்களை சீரழித்து வருகிறது. மருத்துவ கவுன்சிலை ஒழித்துவிட்டது. இதனால் மருத்துவ கல்வி வர்த்தக மயமாகிவிட்டது. பாஜவின் இந்த செயல்பாடுகள் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும். அவர்களின் ஊழல்கள் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கிறது.

எனவே பாஜ அல்லாத கட்சிகள், ஜனநாயகத்தையும், அரசியல் சட்டத்தையும் காப்பாற்றுவதற்கு ஓரணியில் சேர்வது வரலாற்று கட்டாயமாகும். அதன்மூலம்தான் பாசிச பாஜ ஆட்சியை வீழ்த்த முடியும். ஜனநாயகத்தின் மதசார்பற்ற தன்மையும் காப்பாற்ற முடியும்.இந்த முயற்சிக்கு திமுக முழு ஆதரவு அளித்து வருகிறது. பாஜவுக்கு எதிரான அணி உருவாக்குவதில் தேசிய அளவில் திமுக முக்கிய பங்கு வகிக்கும். எத்தனை சீட்டு என்பது குறித்து விவாதிக்கவில்லை. ஒன்றிணைந்து செயல்படுவது பற்றி மட்டுமே பேசினோம் என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: