டெல்லி தலைமை செயலகத்தில் பரபரப்பு முதல்வர் கெஜ்ரிவால் மீது மிளகாய் ெபாடி தாக்குதல்: வாலிபர் கைது

புதுடெல்லி: பாதுகாப்பு நிறைந்த டெல்லி தலைமை செயலகத்தில் முதல்வர் கெஜ்ரிவால் மீது வாலிபர் ஒருவர் மிளகாய் பொடி வீசி தாக்குதல் நடத்தினார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், தலைமை செயலகத்தில் நேற்று வழக்கமான பணியில் ஈடுபட்டு இருந்தார். நண்பகல் மதிய உணவு சாப்பிடுவதற்காக மூன்றாவது தளத்தில் உள்ள அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு வெளியே வந்தார். அப்போது, அங்கு வந்த நபர் ஒருவர் திடீரென கெஜ்ரிவாலின் கண்ணை குறிவைத்து மிளகாய் பொடியை வீசினார். ஆனால், கெஜ்ரிவால் சுதாரித்துக் கொண்டு நகர்ந்ததால் மிளகாய் பொடி அவரது கண்ணில் படாமல் தப்பினார். அங்கு இருந்தவர்கள் அந்த நபரை மடக்கி பிடித்தனர். அப்போது, அனில் குமார் என்ற அந்த நபர், “சிறையிலிருந்து வெளியே வந்ததும் சுட்டுக் கொல்வேன்” எனவும் மிரட்டினார்.

அனில் குமாரை மடக்கி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது பற்றி போலீசார் தெரிவிக்கையில், “அனில் குமாரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. அவரிடமிருந்து ஆதார் கார்டு கைப்பற்றப்பட்டுள்ளது. கெஜ்ரிவால் மீது வீசுவதற்காக புகையிலை பாக்கெட்டில் மிளகாய் பொடியை மறைத்து எடுத்து வந்துள்ளார்” என்றனர். இந்த தாக்குதலுக்கு பின்னணியில் பாஜ உள்ளதாக ஆம் ஆத்மியின் செய்தி தொடர்பாளர் சவுரவ் பரத்வாஜ் குற்றம்சாட்டியுள்ளார். அவர் கூறுகையில், “மிகவும் பாதுகாப்பு நிறைந்த முதல்வர் அலுவலகத்துக்குள் நுழைந்து கெஜ்ரிவால் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதை மிகவும் முக்கியமான விஷயமாக எடுத்துக் கொண்டுள்ளோம். அரசியல் ரீதியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளதாகவே கருதுகிறோம். இது குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்”என்றார்.

3வது முறை தாக்குதல்

போலீசார் உரிய முறையில் பாதுகாப்பு வழங்காததால் கடந்த ஒரு மாதத்திற்குள்  கெஜ்ரிவால் மீது 3வது முறையாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இரு வாரத்திற்கு முன் நடைபெற்ற சிக்னேச்சர் பால திறப்பு விழாவின் போது, கெஜ்ரிவால் மீது தண்ணீர் பாட்டில் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. பிறகு, தசரா விழாவின் போது அடையாளம் தெரியாத நபர் கெஜ்ரிவால் வீட்டில் நுழைந்து அவரை தாக்க முயன்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: