கஜா புயல் பாதித்த பகுதிகளில் மீட்பு, நிவாரண பணிகள் குறித்து அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: கஜா புயல் பாதிப்பு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்று மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் போர்க்கால அடிப்படையில் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசிடம் தமிழக அரசு புயல் பாதிப்புக்கு என்ன உதவிகள் கேட்டுள்ளன? என்றும் உயர்நீதிமன்றக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. இதுகுறித்து நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு தண்ணீர், பால், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஆட்சியர்கள் உடனடியாக செய்து தரவேண்டும் என்று உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது. மேலும் அடிப்படை வசதிகள் அனைத்தும் மக்களுக்கு சென்றடைந்ததா என்பதை உறுதி செய்து நாளை மறுநாள் அறிக்கை அளிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. மேலும் புயல் பாதித்த பகுதிகளில் எடுக்கப்பட்ட மீட்பு, நிவாரண பணிகள் குறித்து அறிக்கை அளிக்குமாறு தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.

முன்னதாக கஜா புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்கக்கோரியும், நிவாரணப்பணிகளை துரிதப்படுத்த கோரியும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கறிஞர் அழகுமணி முறையீடு செய்தார். இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரணை மேற்கொள்வதாக நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு அறிவித்தது. அதன்படி பகல் 1 மணியளவில் விசாரணை மேற்கொண்ட நீதிபதிகள், கஜா புயல் பாதித்த பகுதிகளில் மீட்பு, நிவாரண பணிகள் குறித்து அறிக்கை அளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: