முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு புயல் நிவாரணத்துக்கு ரூ.1000 கோடி

சென்னை: கஜா புயல் பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகளை செய்ய ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளையும் அவர் அறிவித்துள்ளார். கஜா புயல் பாதிப்பு குறித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கஜா புயல் மற்றும் கனமழையின் காரணமாக நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் 514 பாதுகாப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு, அதில் 2,51,674 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் குடிநீர் வழங்கப்படுகின்றன.  இது மட்டுமல்லாமல், ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10 கிலோ அரிசி, ஒரு வேட்டி, ஒரு சேலை மற்றும் ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் ஆகியவையும் வழங்கப்பட்டு வருகின்றன. மீனவ குடும்பங்களுக்கு குடும்பம் ஒன்றுக்கு தலா 5,000 ரூபாயும், துணிமணிகள், பாத்திர பண்டங்கள் ஆகியவை வாங்க குடும்பம் ஒன்றுக்கு 3,800 ரூபாயும் வழங்க உத்தரவிட்டுள்ளேன். புயல் மற்றும் கனமழை காரணமாக உயிரிழந்த 46 நபர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய், படுகாயமடைந்தவர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய், சாதாரண காயமடைந்தவர்களுக்கு தலா 25,000 ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.  

 உயிரிழந்த 231 பசு மற்றும் எருமை மாடுகளுக்கு  தலா 30 ஆயிரம் ரூபாய், 20 காளை மாடுகளுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய், 19 கன்றுகளுக்கு தலா 15 ஆயிரம் ரூபாய், 1181 ஆடுகளுக்கு தலா ரூ.3 ஆயிரம், 14,986 கோழி மற்றும் பறவைகளுக்கு தலா ரூ.100 வழங்கப்படும். டிசம்பர் மாதத்திற்கான மண்ணெண்ணெய் ஒதுக்கீடு நவம்பர் மாதமே வழங்கப்படும். முழுவதும் சேதமடைந்த குடிசை வீடு ஒன்றுக்கு 10,000 ரூபாய், பகுதி சேதமடைந்த குடிசை வீடுகளுக்கு 4,100 ரூபாய் வழங்கப்படும். முழுவதும் சேதமடைந்த குடிசைகளுக்கும், வீடுகளுக்கும் பதிலாக தகுதி வாய்ந்த நபர்களுக்கு புதியதாக வீடு கட்ட உரிய நிதி உதவி வழங்கப்படும். ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறைக்கு 25 கோடி ரூபாய், நெடுஞ்சாலைத் துறைக்கு 25 கோடி ரூபாய், பொதுப்பணித்துறைக்கு 10 கோடி ரூபாய், சுகாதாரத்துறைக்கு 2 கோடி ரூபாய், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துக்கு 5 கோடி ரூபாய், நகராட்சி நிர்வாக துறைக்கு 5 கோடி ரூபாய், பேரூராட்சிகளின் இயக்குநரகத்திற்கு 5 கோடி ரூபாய், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகங்களுக்கு தலா 5 கோடி ரூபாய், திண்டுக்கல் மாவட்ட

நிர்வாகத்திற்கு 2.5 கோடி ரூபாய், சிவகங்கை, ராமநாதபுரம், கரூர், திருச்சி மற்றும் தேனி மாவட்ட நிர்வாகங்களுக்கு தலா 1 கோடி ரூபாய் வழங்கப்படும்.

ஒரு தென்னை மரத்திற்கு 600 ரூபாய், அவற்றை வெட்டி அகற்றிட ஒரு மரத்திற்கு 500 ரூபாய் வழங்கப்படும். சுமார் 175 மரங்கள் நடப்பட்டுள்ள ஹெக்டேர் ஒன்றுக்கு 1,92,500 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும்.  இதுதவிர, மறுசாகுபடி செய்ய ஹெக்டேருக்கு 72,100 ரூபாய் வழங்கப்படும்.  இதன்மூலம் நிவாரணம் மற்றும் மறுசாகுபடிக்கு தென்னை விவசாயிகள் ஹெக்டேருக்கு 2,64,600 ரூபாய் பெறுவர். சொட்டு நீர் பாசனத்திற்கு சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும் மற்ற விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படும். நெல் பயிர் சேதங்களுக்கு ஹெக்டேருக்கு 13,500 ரூபாய் வழங்கப்படும்.  கரும்பு, வாழை, காய்கறிகள் மற்றும் மலர்கள் போன்ற பாசன பயிர்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு நிவாரணமாக ஹெக்டேருக்கு 13,500 ரூபாய் வழங்கப்படும்.  இப்பயிர்களை மறுசாகுபடி செய்ய ஆகும் செலவில் 40 முதல் 50 சதவீத மானியம் வழங்கப்படும்.  முந்திரி பயிர்களுக்கு நிவாரணமாக ஹெக்டேருக்கு 18,000 ரூபாய், அவற்றை வெட்டி அகற்றிட மரத்திற்கு 500 ரூபாய், மறுசாகுபடி செய்ய 40 முதல் 50 சதவீதம் மானியம் வழங்கப்படும்.  சொட்டு நீர் பாசனம் அமைப்பதற்காக சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியமாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூபாய் ஒரு லட்சம் வரையும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியமாக ரூபாய் 75,000 வரையும் மறுசாகுபடி செய்வதற்கு வழங்கப்படும்.

 

பணிகளை மின்வாரியம் விரைந்து முடித்திட முதற்கட்டமாக 200 கோடி ரூபாய் வழங்கப்படும். பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணமாக, முழுவதும் சேதமடைந்த வலைகளுடன் கூடிய கட்டுமரங்களுக்கு 42,000 ரூபாய், பகுதி சேதமடைந்த வலைகளுடன் கூடிய கட்டுமரங்களுக்கு 20,000 ரூபாய், முழுவதும் சேதமடைந்த பைபர் படகுகள் மற்றும் வலைகளுக்கு 85,000 ரூபாய், பகுதி சேதமடைந்த பைபர் படகுகள் மற்றும் வலைகளுக்கு 30,000 ரூபாய், முழுவதும் சேதமடைந்த விசைப் படகுகளுக்கு 5  லட்சம் ரூபாய், பகுதி சேதமடைந்த விசைப் படகுகளுக்கு 3 லட்சம் ரூபாய், வலைகள் மட்டுமே சேதம் அடைந்திருந்தால் 10,000 ரூபாய், எஞ்சின் பழுது நீக்கம் செய்ய 5,000 ரூபாய் வழங்கப்படும். மக்களுக்கான மீட்பு, நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிககளுக்கு 1,000 கோடி ரூபாய் உடனடியாக விடுவிக்கப்படும். தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தேவையான நிதியினை அளிக்க மத்திய அரசை தமிழ்நாடு அரசு வலியுறுத்தும். இன்று நான் நேரில் சென்று நிவாரண உதவிகள் வழங்குகிறேன். குடிமக்கள், நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் நன்கொடையாளர்கள் நன்கொடைகள் மூலம் உதவிட வேண்டுகிறேன்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இன்று பார்க்கிறார்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்று காலை விமானம் மூலம், திருச்சி செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுகிறார். மேலும் நிவாரண உதவிகளையும் வழங்குகிறார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: