கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பணியாற்றும் மின் ஊழியர்களுக்கு நாள் ஒன்றுக்கு 3 நாள் சம்பளம்: மின்வாரியம் அதிரடி அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு, நாள் ஒன்றுக்கு 3 நாள் சம்பளம் வழங்குவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது. ‘கஜா’ புயலால் நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, திண்டுக்கல் ஆகிய இடங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. லட்சக்கணக்கான மரங்கள் சாய்ந்தன. இதில் மின்வாரியத்திற்கு அதிகப்படியான பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக, 84,836 மின்கம்பங்களும், 841 டிரான்ஸ்பார்களும் சேதமடைந்தன. இதை சரிசெய்யும் பணியில், 13,629 மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறு பணியாற்றும் ஊழியர்கள் மிகவும் சிக்கலான சவால்களை சந்தித்து வருகின்றனர். இதையடுத்து அப்பணியாளர்களுக்கு நாள்ஒன்றுக்கு, 3 நாள் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், ‘‘கஜா புயல் பாதித்த இடங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, நாள் ஒன்றுக்கு மூன்று நாள் சம்பளம் கடந்த 16ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. அதுதவிர பேட்டா தொகை, 100 ரூபாயும் நாள் ஒன்றுக்கு வழங்கப்படுகிறது. அதேபோல், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தினசரி கூலியாக 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. முழுமையாக பணி நிறைவடையும் வரை, அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு இதே சம்பளம் வழங்கப்படும்’’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: