கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணி இயல்பு நிலைக்கு திரும்ப போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை: முதல்வர் எடப்பாடி உறுதி

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ‘கஜா’ புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாழ்வான பகுதிகளில் இருந்த 81,948 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு, 471 முகாம்களில் தங்க  வைக்கப்பட்டனர். இவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. புயல் மற்றும் மழை காரணமாக ஏற்படக்கூடிய நோய்களை தடுக்கும் விதமாக 216 மருத்துவ முகாம்களும், நடமாடும் மருத்துவ முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன. 405 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.  மின் விநியோக பாதிப்புகளை சீர் செய்ய ஏற்கனவே 7,000 மின் கம்பங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனுப்பப்பட்டன. மேலும், கூடுதலாக பிற மாவட்டங்களிலிருந்து, மின் பணியாளர்கள் பாதிப்பு ஏற்படக்கூடிய மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டனர். தங்கு தடையின்றி பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க தேவையான ஜெனரேட்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.  13,000 மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன. அவற்றை சீரமைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.

5,000 மரங்கள் வேருடன் சாய்ந்து சாலைகளில் விழுந்துள்ளன.  சாலைகளில் விழுந்துள்ள மரங்கள் போர்க்கால அடிப்படையில் அப்புறப்படுத்தப்பட்டு, சாலை போக்குவரத்து சீர்செய்யப்பட்டு வருகிறது. புயலால் ஏற்பட்ட சேதங்களை உடனடியாக ஆய்வு செய்து கணக்கீடு செய்யுமாறு மாவட்ட ஆட்சி தலைவர்கள் மற்றும் வருவாய் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளேன். குறிப்பாக, புயல் மற்றும் கனமழையால் உயிரிழந்த கால்நடைகள், பாதிப்படைந்த வீடுகள், பயிர்கள், மரங்கள் மற்றும் சேதமடைந்த மீன் பிடி படகுகள் ஆகியவற்றை ஆய்வு செய்து உடனடியாக அறிக்கை அனுப்புமாறு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சி தலைவர் மற்றும் அரசு துறை செயலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

‘கஜா’ புயல் மற்றும் கன மழை காரணமாக 13 பேர் உயிரிழந்துள்ளனர்.  அவர்களது குடும்பங்களுக்கு நிவாரணமாக தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும். படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும், சாதாரண காயமடைந்தவர்களுக்கு தலா 25,000 ரூபாயும் வழங்கப்படும். மேலும், ‘கஜா’ புயலால் பாதிப்படைந்த பகுதிகளில் காவல் பணிகளை ஒருங்கிணைக்க நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு ஏடிஜிபி ஷகீல் அக்தர், திருவாரூர் மாவட்டத்திற்கு ஏடிஜிபி தாமரைக்கண்ணன், தஞ்சாவூர் மாவட்டத்திற்கு ஏடிஜிபி ரவி மற்றும் பாதிப்படைந்த ரயில்வே பகுதிகளை சீரமைக்க ஏடிஜிப சைலேந்திர பாபு நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளேன்.

ஏற்கனவே, அமைச்சர்கள் எம்.சி.சம்பத், காமராஜ், ஓ.எஸ்மணியன், விஜயபாஸ்கர், துரைக்கண்ணு, மணிகண்டன் ஆகியோர் அந்தந்த மாவட்டங்களில் இரவு, பகலாக மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

‘கஜா’ புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை உடனடியாக சீர் செய்து, அனைத்து நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் இயல்பு நிலைக்கு திரும்ப தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள  உத்தரவிட்டுள்ளேன்.  இந்த நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, ஜெயகுமார், ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் எனது உத்தரவின் பேரில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: