102 துணை மின்நிலையங்கள் சேதம்: தமிழ்நாடு மின்வாரியம் தகவல்

சென்னை: ‘தமிழகத்தில் ‘கஜா’ புயல் காரணமாக, 102 துணை மின்நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளது’ என, தமிழ்நாடு மின்வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை: ‘கஜா’ புயல் நேற்று அதிகாலை கரை கடந்ததை யொட்டி தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் மின் பாதிப்பு மற்றும் சேதங்கள் அதிகளவில் இருந்துள்ளது.  பிற மாவட்டங்களில் பாதிப்பு குறைவாகவே இருந்தது. 7 மாவட்டங்களிலும் மொத்தம் 12000 மின் கம்பங்கள், 102 துணை மின்நிலையங்கள், 495 மின் கடத்திகள், 100 மின்மாற்றிகள், 500 கிலோ மீட்டர் மின் வழித்தடங்கள் பாதிப்பு ஏற்பட்டுள்ளன.

இதையடுத்து, அந்தந்த மாவட்டங்களில் தலைமைப் பொறியாளர், மேற்பார்வை பொறியாளர்கள், செயற் பொறியாளர்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு மின் சீரமைப்பு பணிகள் காலை முதல் நடைபெற்று வருகின்றன.

திருவாரூர் மாவட்டத்திற்கு மட்டும் கூடுதல் பணியாளர்கள் தேவைப்படுவதால் திருச்சி, கோவை மாவட்டங்களிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின் தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். சீரமைப்பு பணிகளுக்கு தேவையான மின் கம்பங்கள் மின்மாற்றிகள், மின் கடத்திகள், மின் கம்பிகள் மற்றும் தளவாட பொருட்கள் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் உத்தரவின்படி எரிசக்தித் துறை செயலர் முகமது நசிமுதீன், மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக தலைவர் விக்ரம் கபூர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் குழு சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது.

தஞ்சாவூர், திருச்சி, நாகப்பட்டினம் ஆகிய மூன்று மாவட்டங்களில் சீரமைப்பு பணிகள் போர்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. படிப்படியாக மின் விநியோகம் சீரமைக்கப்பட்டு இரண்டு நாட்களுக்குள் 100 சதவீதம் மின் விநியோகம் செய்யப்படும். குறைந்த அளவே பாதிப்பு ஏற்பட்ட பிற மாவட்டங்களில் சீரமைப்பு பணிகள் இன்று மாலையே முடிக்கப்பட்டு மின் விநியோகம் வழங்கப்படும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: