அரசு விடுத்த எச்சரிக்கையின் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: கஜா’ புயல் காரணமாக தமிழக அரசு விடுத்த எச்சரிக்கையை அடுத்து யாரும் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லாததால் எந்த மீனவர்களுக்கும் ஆபத்து ஏற்படவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

தமிழக மீன்வள துறை அமைச்சர் ஜெயக்குமார் நேற்று சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த காலங்களில் ஏற்பட்ட அனுபவங்களை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு, கஜா புயலின் தாக்கம் கடுமையாக இருக்கும். எனவே மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று கடந்த 11ம் தேதியே மீனவர்களுக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டது. மீன்வளத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் ஒவ்வொரு மீனவ கிராமங்களுக்கும் சென்று கண்காணித்தனர்.

கடலூர், நாகப்பட்டினம், தஞ்சை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் 333 மீனவ கிராமங்களில் 4,926 விசைப்படகுகள், 18,364 ஆயிரம் நாட்டு படகுகள் கண்டிப்பாக படகுகள் நிறுத்தும் தளத்தில் நிறுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. அதன் அடிப்படையில் யாரும் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லாததால் எந்த மீனவர்களுக்கும் ஆபத்து ஏற்படவில்லை. ஆனால் நாட்டுப்படகுகள் கடலுக்குள் அடித்து செல்லப்பட்டு இருக்கிறது. தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் 200க்கும் மேற்பட்ட படகுகள் கவிழ்ந்துள்ளதாக தகவல் வந்துள்ளது.

புயல் பாதித்த இடங்களில் பகுதியாக சேதமடைந்த படகுகள் எத்தனை, முழுமையாக சேதமடைந்த படகுகள் எவ்வளவு என்பது குறித்த கணக்கெடுப்பு பணிகளை வருவாய்த்துறை, மீன்வளத்துறை அதிகாரிகள் இணைந்து மேற்கொண்டுள்ளனர். அவர்கள் அறிக்கையின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு முதல்வர் உரிய நிவாரணம் வழங்குவார். தமிழக அரசு மேற்கொண்ட புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எதிர்க்கட்சிகளும் பாராட்டி உள்ளன. அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.

மீனவர்கள் பாதுகாப்புக்கு புதிய செல்போன் செயலி

மீன்பிடிப்பதற்காக கடலுக்கு செல்லும் மீனவர்கள் மற்றும் மீன்பிடி கலன்களின் பாதுகாப்பை உறுதி செய்திடவும், மீன்பிடி பகுதிகளை கண்டறிந்து பதிவு செய்து திறன்மிக்க மீன்பிடிப்பு மேற்கொள்ளவும், பேரிடர் மற்றும் ஆபத்து காலங்களில் வானிலை மற்றும் புயல் செய்திகளை அறிந்துகொள்ள தமிழ்நாடு மீன்வளத்துறை, மத்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் தேசிய கடலோர ஆராய்ச்சி நிலையம் மற்றும் இந்திய வானிலை துறையுடன் இணைந்து தூண்டில்’ என்ற கைபேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த கைபேசி செயலியை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நேற்று முன்தினம் சென்னையில் மீன்வளத்துறை இயக்குநர் அலுவலகத்தில் துவக்கி வைத்தார். தூண்டில்’ கைபேசி செயலியை மீன்வளத்துறை இணையதளத்தில் இருந்தும் (www.fisheries.tn.gov.in), தேசிய கடலோர ஆராய்ச்சி நிலைய இணையதளத்தில் இருந்தும் (www.icmam.gov.in) பதிவிறக்கம் செய்து மீனவர்கள் பயன்படுத்தலாம்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: