இரண்டு நீதிபதிகள் முன்னிலையில் ரயில் கொள்ளையர்கள் அடையாள அணிவகுப்பு

* புழல் சிறையில் மூன்றரை மணி நேரம் நடந்தது

* மாணவர்கள், பயணிகள் அடையாளம் காட்டினர்

சென்னை: புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட ரயில் கொள்ளையர்களிடம் 2 நீதிபதிகள் முன்னிலையில் நேற்று மூன்றரை மணி நேரம் அடையாள அணிவகுப்பு நடந்தது. அப்போது குற்றவாளிகளை 2 கல்லூரி மாணவர்கள், பயணிகள் அடையாளம் காட்டினர். சேலத்திலிருந்து சென்னை வந்த ரயிலில் மேல் கூரையை வெட்டி ரூ.5.78 கோடி கொள்ளையடித்த வழக்கில் மத்திய பிரதேச கொள்ளை கும்பலை சேர்ந்த தினேஷ், ரோஹன் பார்தி ஆகியோரை சிபிசிஐடி போலீசார் கடந்த மாதம் 12ம் ேததி சென்னையில் கைது செய்தனர். அவர்கள் அளித்த தகவலின்படி, மத்திய பிரதேச சிறையில் இருந்த முக்கிய குற்றவாளியான மோஹர் சிங் மற்றும் அவரது கூட்டாளிகளான காளியா (எ) கிருஷ்ணா (எ) கபு, மகேஷ் பர்டி, ரூசி பர்டி, பிலித்தியா (எ) பர்ஜிமோகன் என 5 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

இவர்கள் 5 பேரையும் 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தப்பட்டது. அதை தொடர்ந்து காவல் முடிந்து 5 பேரையும் கடந்த 12ம் தேதி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வரும் 26ம் தேதி வரை நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைத்தனர். இதற்கிடையே, சிபிசிஐடி போலீசார், ரயில் கொள்ளையில் கைது செய்யப்பட்ட 7 பேரிடம் வரும் 14ம் தேதி அடையாள அணி வகுப்பு நடத்த வேண்டும் என்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் திங்கட்கிழமை மனு தாக்கல் செய்தனர். அந்த மனு மீதான விசாரணை கடந்த 13ம் தேதி நடந்தது. அப்போது, சைதாப்பேட்டை நீதிமன்றம், வரும் 16ம் தேதி பாதுகாப்பான இடத்தில் குற்றவாளிகளிடம் அடையாள அணி வகுப்பு நடத்த அனுமதி வழங்கியது.

அதை தொடர்ந்து, நேற்று காலை 11.15 மணிக்கு புழல் மத்திய சிறைக்கு விரைவு நீதிமன்ற நீதிபதி ஆனந்தராஜ், சைதாப்பேட்டை 9வது மாஜிஸ்திரேட் சுப்ரஜா ஆகியோர் வந்தனர். அப்போது ரயில் கொள்ளை விசாரணை அதிகாரிகளான சிபிசிஐடி போலீசார், ரயில் கொள்ளையர்களை அடையாளம் காட்ட கல்லூரி மாணவர்கள் 2 பேர் மற்றும் 3 பயணிகள், ரயில்வே அதிகாரிகள் அழைத்து வரப்பட்டனர். பின்னர் புழல் மத்திய சிறையில் பலத்த பாதுகாப்புடன், கைது செய்யப்பட்ட 7 ரயில் கொள்ளையர்களை வரிசையாக நிற்கவைத்து 2 நீதிபதிகள் முன்னிலையில் அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டது. மூன்றரை மணி நேரம் நடந்த இந்த அடையாள அணி வகுப்பில் சம்பவத்தன்று ரயிலில் பயணிகளுடன் பயணம் செய்ததாக அடையாளம் காட்டினர். அப்போது நீதிபதிகள் அடையாளம் காட்டியவர்கள் அளித்த தகவல்களை பதிவு செய்து கொண்டனர். இந்த அடையாளஅணிவகுப்பின்போது, சிறைத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: