ஓசூரில் காதல் திருமணம் செய்த ஜோடி ஆணவக்கொலை: கர்நாடக காவிரியில் சடலங்கள் வீச்சு , பெண்ணின் தந்தை உட்பட 3 பேர் சிக்கினர்

ஓசூர்: ஓசூரில் காதல் திருமணம் செய்த ஜோடி கடத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். அவர்களது உடல்கள் கர்நாடக மாநில எல்லையில் காவிரி ஆற்றில் மீட்கப்பட்டது. இதுதொடர்பாக பெண்ணின் தந்தை உள்பட 3 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.   கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சூடகொண்டப்பள்ளியை சேர்ந்தவர் நாராயணப்பா. இவரது மகன் நந்தீஸ்(25). இவர், ஓசூர் புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள கடை ஒன்றில் வேலை செய்து வந்தார். அதே ஊரைச் சேர்ந்தவர் சீனிவாசன் மகள் சுவாதி(21). இவர், தனியார் கல்லூரி ஒன்றில் பி.காம். படித்து வந்தார். ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள் என்பதால் இருவருக்கும் இடையே காதலாக மலர்ந்தது. ஆனால், வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், காதலுக்கு பெண் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது.

இந்நிலையில், நந்தீசும் சுவாதியும் கடந்த 15.8.2018 அன்று, சூளகிரி திம்மராய சுவாமி கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர், ஓசூரில் ஒரு வீட்டில் வாடகைக்கு குடி வந்துள்ளனர்.  இதனிடையே, கடந்த 10ம் தேதி இரவு புனுகன்தொட்டியில் உள்ள உறவினரை பார்த்து விட்டு வருவதாக கூறிச்சென்ற இருவரும், பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து நந்தீஸின் தம்பி சங்கர்(20), ஓசூர் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் புகார் தெரிவித்தார். இதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் சிவனசமுத்திரம் நீர்வீழ்ச்சிக்கு அருகில் வாலிபர், இளம்பெண் உடல்கள் மிதப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், போலீசார் சென்று பார்த்ததில், அவர்கள் நந்தீஸ், சுவாதி என்பது தெரியவந்தது.

இதுபற்றி தீவிர விசாரணை நடத்தியதில், திருமணத்தை பிடிக்காத பெண்ணின் குடும்பத்தினர், அவர்களை கடத்திச்சென்று கொடூரமாக கொலை செய்து உடல்களை காவிரி ஆற்றில் வீசியது தெரியவந்தது. இதையடுத்து, சுவாதியின் தந்தை சீனிவாசன்(45), பெரியப்பா வெங்கடேஷ்(47), உறவினர் கிருஷ்ணன்(26) ஆகிய 3 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர். மேலும் 3 பேரை தேடி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட நந்தீஸ், சுவாதி உடல்களை பிரேதப் பரிசோதனைக்கு பிறகு ஓசூர் கொண்டு வர போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.  காதல் திருமணத்தால் நடந்த இந்த ஆணவக்கொலையால், ஓசூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: