கார்த்திகை தீப திருநாளையொட்டி அகல்விளக்கு தயாரிப்பு பணி தீவிரம்: போதிய விலை இல்லாததால் தொழிலாளர்கள் வேதனை

சேலம்: கார்த்திகை தீப திருநாளையொட்டி அகல்விளக்கு தயாரிப்பு பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். போதிய விலை கிடைக்காததால், நஷ்டம் ஏற்பட்டு வருகிறது என வேதனை தெரிவித்தனர்.

தமிழர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான கார்த்திகை தீப திருநாள், கார்த்திகை மாதம் பௌர்ணமி தினத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம், வீடுகளில் அகல்விளக்குகளை ஏற்றி வைத்து, தீப வழிபாடு நடத்துவது வழக்கம். இதனால், ஒவ்வோர் ஆண்டும் கார்த்திகை தீப தினத்தையொட்டி அகல்விளக்குகள் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது.  நடப்பாண்டு கார்த்திகை திருநாள் வரும் 23ம் தேதி வருகிறது. இதற்காக தற்போது, மண்பாண்ட தொழிலாளர்கள் அகல்விளக்குகளை தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் வனவாசி அருகேயுள்ள வெள்ளக்கல்பட்டி மற்றும் திருமலைகிரி பகுதியில் அதிகளவு அகல்விளக்குகள் தயாரிக்கப்படுகிறது. குல தொழிலாக செய்து வரும், மண்பாண்ட தொழிலாளர்களுக்கு, இந்த அகல்விளக்கு மூலம் போதிய அளவு வருவாய் கிடைப்பதில்லை. தற்போதும், 1000 அகல்விளக்கிற்கு குறைந்தபட்சம் ₹800 கிடைத்தால் தான், முதல் மற்றும் உழைப்பிற்கு போதுமானதாக இருக்கும் என்கின்றனர். ஆனால், 1000 அகல்விளக்குகளை ₹600 முதல் ₹700 வரையில் தான் மொத்த வியாபாரிகள் கேட்கின்றனர். இது பற்றி மண்பாண்ட தொழிலாளர்கள் கூறுகையில், ‘‘25 ஆயிரத்திற்கும் அதிகமாக அகல்விளக்குகளை தயாரித்து வைத்துள்ளோம். ஒவ்வொரு ஆண்டும் வீடுகளில் விளக்கேற்றும் பெண்கள், புதிய விளக்குகளை தான் பயன்படுத்துவார்கள்.

அதனால், நடப்பாண்டு செய்யப்பட்டுள்ள விளக்குகள் வியாபாரம் ஆகும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த அகல்விளக்குகளை வாங்க வரும் மொத்த வியாபாரிகள், 1000 விளக்கிற்கு ₹600 முதல் ₹700 வரை தான் தருவேன் என்கிறார்கள். ஆனால், ஒருநாள் 2 பேர் சேர்ந்து 1000 விளக்கை தான் தயாரிக்க முடியும். மண், சுடுவதற்கு ஆகும் விறகு, உழைப்பு போன்றவற்றிற்கு இந்த தொகை போதாது. வெளியில் சில்லரையில் வியாபாரம் பார்க்கும் நபர்கள், 10 ரூபாய்க்கு 5, 6 அகல்விளக்குகளை கொடுக்கின்றனர். அதனால், விலையை உயர்த்திக் கொடுத்தால், தொழில் செய்ய ஏதுவாக இருக்கும்,’’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: