அரசு உதவவில்லை.. மீனவர் சங்கம்தான் உதவியது சொந்த நாட்டில் அகதிகளானோம்

சென்னை: கஜா புயலால் திசைமாறி காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் தஞ்சம் அடைந்த 52 மீனவர்களை மீன்வளத்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாததால், அவர்கள் மீனவர் சங்கம் உதவியுடன் சொந்த ஊருக்கு திரும்பி சென்றனர். தமிழகத்தில் கஜா புயல் காரணமாக கடலில் சீற்றம் ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் நாகை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இருந்து 12 விசைப்படகுகளில் மீன் பிடிக்க சென்ற 52 மீனவர்கள் கடலில் ஏற்பட்ட சீற்றத்தால் தங்களது படகுகளுடன் திசை மாறி, சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுக பகுதிக்கு நேற்று முன்தினம் வந்தனர். இவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் போன்ற வசதிகளை செய்து கொடுக்க மீன்வளத்துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த மீனவர்கள் அனைவரும் தாங்கள் வந்த படகுகளில், கடல் மார்க்கமாக மீண்டும் தங்களது சொந்த ஊருக்கு திரும்பி சென்றனர்.

முன்னதாக மீனவர்கள் கண்ணீர் மல்க கூறியதாவது: கஜா புயல் காரணமாக கடல் மிகுந்த சீற்றமாக இருந்தது. ஊரில் தொடர்பு கொண்டு கேட்டோம். இங்கு வர வேண்டாம். அருகிலுள்ள துறைமுகத்துக்கு செல்லுங்கள் என்று, உறவினர் மற்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து, நேற்று அதிகாலை நாங்கள் சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்திற்கு வந்தடைந்தோம். தற்போது வரை எந்த அதிகாரியும் எங்களை சந்திக்கவில்லை. இங்குள்ள மீனவர் சங்கம் மற்றும் நண்பர்கள் மூலமாக, எங்களுக்கு உதவி கிடைத்தது. எந்த அதிகாரிகளும் எங்களை கண்டுகொள்ளவில்லை என்று நினைக்கும்போது சொந்த நாட்டில் அகதியை போல் உள்ளதாக நாங்கள் உணர்கிறோம். ஆகையால் இங்கிருந்து திரும்புகிறோம். எங்களுக்கு உதவிகள் செய்த சக மீனவ நண்பர்களூக்கு நன்றி.இவ்வாறு அவர்கள் கூறினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: