விபத்து காப்பீடு கோரிய 76 போலி வழக்குகளின் விசாரணைக்கு தடை : சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: விபத்து காப்பீடு கோரி தொடரப்பட்ட 76 போலி வழக்குகளின் விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. வண்டலூர்-பூந்தமல்லி புறவழிச்சாலையில் கடந்த ஆண்டு பிப்ரவரி 9ம் தேதி நடந்த சாலை விபத்தில் மோகன் (54) என்பவர்  பலியானார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சோமங்கலம் போலீசார்   அடையாளம் தெரியாத வாகனம் மோதி  மோகன் இறந்து விட்டதாக,

பெரும்புதூர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர்.  இந்நிலையில், மோகன் பலியானதற்கு இழப்பீடு கோரி 3 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன என்று இழப்பீடு தரும் இன்சூரன்ஸ் நிறுவனமான சோழமண்டலம் நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த மனுவில், சென்னையில் உள்ள 2  நீதிமன்றங்களில் 2 வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. ஒரு வழக்கில் 42.35 லட்சமும், மற்றொரு வழக்கில் 50 லட்சமும் இழப்பீடு கோரப்பட்டுள்ளது. அதேபோல, திருவள்ளூர் நீதிமன்றத்தில் 35 லட்சம் இழப்பீடு கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  இந்த 3 வழக்குகளுக்கும் பதிலளிக்க எங்களுக்கு சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டிருந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி பி.என்.பிரகாஷ் அளித்த உத்தவில், ‘‘வாகன விபத்து வழக்குகள் தொடர்பான 55 வழக்கு கட்டுகள் மாயமாகி விட்டதாக புகார் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, காணாமல் போன வழக்கு ஆவணங்கள் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரிக்க உத்தரவிடப்படுகிறது. போலி எப்ஐஆர், போலி இழப்பீடு கோரப்பட்டது குறித்து உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையிலான நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழு தனது அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. விபத்து இழப்பீடு வழக்குகளுக்கான தீர்ப்பாயங்களில் 353 வழக்குகள் இரட்டை இழப்பீடு கோரும் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதில் 111 வழக்குகளில் மனுதாரர்களுக்கும், அவர்களின் வக்கீல்களுக்கும் வழக்குகளை தள்ளுபடி செய்வது குறித்து நிபுணர் குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது’’ என்று உத்தரவிட்டார். வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அளித்த உத்தரவு வருமாறு:

 இந்த நீதிமன்றம் நியமித்த நீதிபதி சந்துரு தலைமையிலான நிபுணர் குழு தனது 2வது அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதில், 8.90 கோடி மதிப்பிலான 76 போலி வழக்குகள் வாபஸ் பெறப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இது போல போலி வழக்குகளை தாக்கல் செய்த வேலு உள்ளிட்ட 7 வக்கீல்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்யப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், அவர்களைத் தண்டிக்க இந்த நீதிமன்றம் விரும்பவில்லை. அவர்களுக்கு வாய்ப்பளித்து அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிடப்படுகிறது.

இந்த வழக்கில் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ், நியூ இண்டியா அஸ்யூரன்ஸ், ஓரியண்டல் இன்சூர்ன்ஸ், நேஷனல் இன்சூரன்ஸ் ஆகிய 4 பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவன அதிகாரிகள் நீதிபதி குழுவின் முன் ஆஜராகவில்ைல. பொது மக்களின் பணத்துக்கு காவலனாக இருக்க வேண்டிய காப்பீட்டு  நிறுவனங்கள் எதையோ மறைக்க முயற்சிப்பதாக  தெரிகிறது. இனிமேலும், நீதிபதி சந்துரு விசாரணைக்கு சம்பந்தப்பட்ட  பொதுத்துறை காப்பீட்டு நிறுவன அதிகாரிகள் ஆஜராகாமல் இருந்தால்,  இந்த மோசடியில் அவர்களுக்கும் தொடர்பு இருப்பதாக கருதி அவர்கள் மீது குற்ற நடவடிக்கை மேற்கொள்ளும் படி உத்தரவிட நேரிடும். மேலும், போலி காப்பீட்டு வழக்குகளில் தொடர்புடைய  7 வக்கீல்களும் டிசம்பர் 13ம் தேதி  உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். விபத்து காப்பீடு கோரி தாக்கல் செய்யப்பட்ட 76 போலி  வழக்குகளின் விசாரணைக்கு தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: