கஜா புயலால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

சென்னை: கஜா புயலால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். தற்போது வரை கஜா புயலால் 11 பேர் உயிரிழந்துள்ளதாக முதலமைச்சர் தெரிவித்தார். மேலும் புயலில் படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும், சிறு காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க ரூ.25,000 வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

புயல் பாதித்த பகுதிகள் விரைவில் இயல்பு நிலைக்கு வரும் என்றும், மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார். புயலால் சேதமடைந்த பகுதிகளை நேரில் சென்று பார்வையிட உள்ளேன் என்றும் அவர் தெரிவித்தார். கஜா புயல் கரையை கடந்து திண்டுக்கல் அருகே மையம் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடலூர் மாவட்டத்தில் 2 பேர் உயிரிழப்பு

கடலூர் மாவட்டத்தில் கஜா புயல் காரணமாக 2 பேர் உயிரிழந்துள்ளனர். குறிஞ்சிப்பாடியில் மின்சாரம் தாக்கி ஆனந்த் என்பவர் உயிரிழந்தார். இதே போல் விருத்தாச்சலம் மேமாத்தூரில் சுவர் இடிந்து விழுந்து அய்யம்மாள் என்பவர் உயிரிழந்துள்ளார்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு

கஜா புயல் காரணமாக பட்டுக்கோட்டை அருகே சிவகொல்லையில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த ரமேஷ், சதீஷ், அய்யாதுரை, தினேஷ் ஆகிய 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மின்னல் தாக்கி மூதாட்டி உயிரிழப்பு

வந்தவாசி வெண்குன்றம் கிராமத்தில் மின்னல் தாக்கி பேபி அம்மாள்(75) என்ற மூதாட்டி உயிரிழந்துள்ளார்.

சுவர் இடிந்து விழுந்து சிறுமி உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பிரியாமணி என்ற சிறுமி உயிரிழந்துள்ளார். மேலும் பிரியாமணியின் தந்தை துளசி, தாய் லட்சுமி, சகோதரி பிரியதர்ஷினி ஆகியோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

சிவகங்கையில் சுவர் இடிந்து ஒருவர் பலி

சிவகங்கையில் மழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் முத்துமுருகன் என்பவர் உயிரிழப்பு

திருவாரூரில் 2 பேர் உயிரிழப்பு

கஜா புயல் காரணமாக திருவாரூரில் சுவர் இடிந்து விழுந்ததில் குடவாசல் பகுதியில் ராமகிருஷ்ணன், கோவில்வெண்ணி பகுதியில் கனகவள்ளி ஆகிய 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

முதலமைச்சர் விளக்கம்

110 கி.மீ. வேகத்தில் புயல் காற்று வீசியதில் நாகை மாவட்டத்தில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார். கஜா புயல் சேதம் குறித்து ஆய்வு நடைபெற்று வருவதாகவும், 82,000 பேர் முகாம்களில் பாதுகாப்பாப தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் தெரிவித்தார். அரசு எடுத்து வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளதாகவும், சாய்ந்த மின் கம்பங்களை மின்சார வாரியம் சரி செய்யும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். மேலும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் பணிகளை விரைந்து மேற்கொள்ள அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: