மழைநீருடன் கழிவுநீர் தேங்கியுள்ளதால் டெங்கு காய்ச்சல் அச்சம் சித்த மருத்துவமனையில் சுகாதார சீர்கேடு

* மின்வயர்கள் மூழ்கி கிடப்பதால் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம்

* நடவடிக்கை எடுக்க நோயாளிகள் கோரிக்கை

சென்னை: அரும்பாக்கம் சித்த மருத்துவமனை மற்றும் கல்லூரி நுழைவு வாயிலில் மழைநீருடன் கழிவுநீர் தேங்கியுள்ளதால் ெடங்கு காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. மேலும், மின்வயர்கள் மூழ்கி கிடப்பதால் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளதால், மருத்துவமனை நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை அரும்பாக்கம் அரசு சித்த மருத்துவமனை வளாகத்தில் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி, யோகா மற்றும் இயற்கை மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் ஒருநாளைக்கு 1,800க்கும் அதிகமானோர் வெளிநோயாளிகளாகவும், 320க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாகவும் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இந்த மருத்துவமனை வளாகத்தில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை சம்பந்தமான அனைத்து அலுவலகமும் அமைந்துள்ளதால் தினமும் 2000க்கும் மேற்ப்பட்டவர்கள் இந்த வளாகத்திற்குள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், மழைக்காலங்களில் வெளியில் இருந்து மழைநீர் மருத்துவமனைக்குள் வருவதால் அதை சரி செய்யும் வகையில் கடந்த மாதம் மருத்துவமனை வளாகத்திற்குள் சிமென்ட் சாலை அமைக்கப்பட்டது. ஆனாலும் மழைநீர்  மருத்துவமனை வளாகத்திற்குள் ஆங்காங்கே குளம்போல் காட்சியளிக்கின்றன. தற்போது புதிதாக அமைக்கப்பட்ட நுழைவு வாயில் முறையாக அமைக்கப்படாததால் அப்பகுதியில் இருந்து வரும் மழைநீர் மற்றும் கழிவுநீர் மருத்துவமனை நுழைவு வாயில் முன்பு குளம்போல் தேங்கியிருக்கிறது. இதனால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் அந்த நுழைவு வாயில் முன்பு தேங்கியிருக்கும் கழிவுநீரில் தான் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது.  

நுழைவுவாயிலில் கழிவுநீர் தேங்கியுள்ளதால் டெங்கு, பன்றிக் காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது.  மருத்துவமனைக்கு உள்ளே டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்படுகிறது. ஆனால் மருத்துவனைக்கு வெளியில் டெங்கு காய்ச்சலை பரப்பும் வகையில் கழிவுநீர் குளம் போல் தேங்கிடக்கிறது என்று மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் முகம் சுழிக்கின்றனர். மேலும் நுழைவு வாயில் முன்பு தேங்கியிருக்கும் கழிவுநீரில் மின்சார வயர்கள் மூழ்கி கிடக்கிறது. நீரிக்குள் மூழ்கி கிடக்கும் மின்சார வயர்கள் தெரியாததால் நோயாளிகள் அந்த மின்சார வயரை தாண்டிய படியே மருத்துவமனைக்கு செல்கின்றனர். இதனால், உயிரிழப்புகள் ஏற்படும் அபாயமும் உள்ளது.

இதைப்போன்று சித்த மருத்துவ கல்லுரி முன்பும் அமைந்துள்ள நுழைவு வாயிலிலும் கழிவுநீர் குளம் போல் தேங்கியுள்ளது. அதனால் கல்லூரிக்கு வரும் பேராசிரியர்கள், மாணவர்கள் கடும் அவதிப்படுகின்றனர். எனவே, அசம்பாவித சம்பவம் நடைபெறுவதற்குள் மருத்துவமனை நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஷேர் ஆட்டோக்களால் இடையூறு

சித்த மருத்துவமனை முன்பு சாலையை கடக்கும் வகையில் வேகதடைகள் அமைக்கப்பட்டது. ஆனால் அந்த வேகத்தடைகள் முறையாக அமைக்கப்படாததால் அண்ணாநகர், முகப்பேர், அம்பத்தூர், வில்லிவாக்கம் போன்ற பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் மின்னல் வேகத்தில் வந்து சாலையை கடக்கிறது. இதனால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் சாலையை கடக்க முடியாமல் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். மேலும், மருத்துவமனைக்கு வெளியில் ஷேர் ஆட்டோக்களும், நோயாளிகள் சாலையை கடக்காத வகையில் மருத்துவமனை முன்பு நிறுத்திவிடுகின்றனர். எனவே, மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் சாலையை கடக்கும் வகையில் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: