கஜா புயல் எதிரொலி மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைக்கு செல்ல தடை: சர்வீஸ் சாலைகள் அடைக்கப்பட்டதால் பரபரப்பு

சென்னை: கஜா புயல் எதிரொலியாக நேற்று மாலை முதல் அதிகாலை வரை மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல போலீசார் தடை விதித்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வங்கக்கடலில் உருவான கற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று புயலாக மாறியது. இந்த புயலுக்கு கஜா என்று ெபயரிடப்பட்டுள்ளது. புயல் காரணமாக தமிழகம் முழுவதும் கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

கஜா புயல் நேற்று இரவு கடலூருக்கும் நாகைக்கு இடையே கரையை கடந்தது. இதனால் கடற்கரை பகுதிகளில் சூறைக்காற்றுடன் 5 அடிக்கு மேல் அலைகள் எழும்பியது. இதையடுத்து மெரினா கடற்கரை மற்றும் பெசன்ட் நகர் கடற்கரை மற்றும் சர்வீஸ் சாலை பகுதிக்குள் பொதுமக்கள் வர மாலை 5 மணிக்கு மேல் போலீசார் தடை விதித்தனர்.

அதையும் மீறி பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் மெரினா கடற்கரைக்கு வந்த வண்ணம் இருந்தனர். அவர்களை போலீசார் திருப்பி அனுப்பினர்.

மேலும், கடற்கரையோரம் உள்ள சர்வீஸ் சாலைகள் இடையே தடுப்புகள் அமைத்து வாகனங்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டது. பாதுகாப்பு பணியில் வருவாய் துறை அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகளுடன் 500க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: