திருவொற்றியூர்-பேசின் சாலையில் ரூ.42 கோடியில் கட்டப்படுகிறது மந்தகதியில் தரைப்பாலப் பணி: குண்டும் குழியுமாக மாறிய சாலையால் வாகன ஓட்டிகள் அவதி

திருவொற்றியூர்: திருவொற்றியூர்-பேசின் சாலையில் ரூ.42 கோடியில் கட்டப்பட்டு வரும் தரைப்பாலம் பணி மந்தகதியில் நடைபெறுகிறது. அங்கு உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக மாறி உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர். திருவொற்றியூரில் இருந்து பேசின் சாலை, மணலி சாலை வழியாக மணலி, மீஞ்சூர் போன்ற பகுதிகளுக்கு மாநகர பஸ், கன்டெய்னர் லாரி, கார், பைக் என்று தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இவ்வாறு செல்லும் வாகனங்கள் இச்சாலையில் உள்ள கால்வாய் மீதுள்ள தரைப்பாலத்தை கடந்து செல்கின்றன. இந்த கால்வாய் மிகவும் பழமையானது என்பதால் பழுதடைந்து எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் இந்த கால்வாய் தரைப்பாலத்துக்கு பதிலாக ரூ.42 கோடி செலவில் புதிய தரைப்பாலம் கட்ட நெடுஞ்சாலைத் துறை திட்டமிட்டு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பணிகள் துவங்கப்பட்டது. இதன்படி, 530 மீட்டர் நீளத்தில் தரைப்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பல்வேறு காரணங்களால் தரைப்பாலம் பணி மந்தகதியில் நடக்கிறது. மேலும் பணிகள் நடைபெற கூடிய பகுதிகளில் சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளதால் வாகனங்கள் செல்ல முடியாமல் சிரமப்படுகின்றன.

மேலும் இரவு நேரங்களில் இந்த பகுதியில் மின் விளக்கு எரியாததால் மோட்டார் பைக்கில் வருபவர்கள் மேடு பள்ளமாக உள்ள சாலையில் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்துக்கு உள்ளாகின்றனர். எனவே, இந்த மேம்பால பணியை விரைவாக முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதுபற்றி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘ஏற்கனவே உள்ள தரைப்பாலத்தை இடித்துவிட்டு தூண்கள் அமைத்து அதன் மீதுதான் புதிய பாலம் கட்ட வேண்டும். இதற்கு இந்த வழியாக போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்து கார்கில் நகர் வழியாக போக்குவரத்தை திருப்பி விட வேண்டும். அதற்கான நடவடிக்கை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் மாற்றுப்பாதைக்கு சாலைகள் போடப்பட்ட பின் தரைப்பாலம் பணி முழுவீச்சில் நடைபெற்று, 6 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்டு விடும்’’ என்றார்.                                                                                                         

கூடுதல் செலவு

தரைப்பாலம் கட்டுமான பணிக்கான காலக்கெடு 2018 டிசம்பர் மாதம் 31ம் தேதியோடு முடிவடைந்து விடுகிறது. ஆனால் தற்போது 60 சதவீதம் மட்டுமே மேம்பாலம் பணி முடிந்துள்ள நிலையில் முழுவதும் முடிவடைய இது இன்னும் 6 மாதங்களுக்கு மேலாக மேல் ஆகும் நிலை உள்ளது. இவ்வாறு பணிகள் முடிவடைய காலதாமதம் ஆவதால் திட்ட மதிப்பீடு செலவுகள் கூடுதலாகும்.

அதிகரிக்கும் விபத்துக்கள்   

தரைப்பாலம் கட்டுமான பணி நடைபெறும் பகுதிக்கு அருகாமையில் சாலையில் மழைநீர் கால்வாய் அமைக்க பள்ளம் தோண்டப்பட்டது. தற்போது இங்கு கால்வாய் அமைக்கும் பணி முடிவடைந்து பல நாட்கள் ஆகியும், மணல் குவியலை அப்புறப்படுத்தாமல் கிடப்பில் போட்டு உள்ளனர். சாலையும் போடப்படவில்லை. இதனால் வாகனங்கள் போக முடியாமல் ஒரு வழி பாதையில் பெரும் சிரமத்துடன் செல்வதோடு நள்ளிரவு நேரங்களில் மணல் குவியல் இருப்பது தெரியாமல் அதன் மீது மோதி வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: