கஜா புயல் காரணமாக சென்னையில் நாளை காலை முதல் மழை பெய்யும் : தமிழ்நாடு வெதர்மேன் உறுதி

சென்னை : கஜா புயல் குறித்த சில விவரங்களை தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஒரு விசித்திரமான சுழற்சியை மேற்கொண்டுள்ள கஜா புயலானது, தற்போதைய நிலவரப்படி மேற்கு - தென்மேற்கு திசையில் மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது.

சென்னைக்கு கிழக்கே 520 கி.மீ. தொலைவிலும், நாகைக்கு 620 கி.மீ. தொலைவிலும் கஜா புயல் உள்ளது. இந்த கஜா புயல் கடலூர் - வேதாரண்யம் இடையே நவம்பர் 15ம் தேதி கரையை  கடக்கும் என்றும் புயல் காரணமாக ராமநாதபுரம், திருவாரூர், கடலூர், நாகை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்றும் அனைவரும் அறிந்த ஒன்றே!

இந்நிலையில் கஜா புயல் குறித்த சில விவரங்களை தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது முகநூல் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் இந்த கஜா புயலானது இன்று மேலும் வலுப்பெற்று தீவிர புயலாக மாறும் என்றும் எனினும் நாளை வலுவிழந்த நிலையிலேயே பாண்டி / கடலூர் மற்றும் நாகை / வேதாரண்யம் இடையே கரையை கடக்கும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே மணிக்கு 70 முதல் 80 கிலோமீட்டர் வேகத்திலும், அவ்வப்போது 90 கிலோ மீட்டர் வேகத்திலும்  சூறாவளி காற்று வீசுவதுடன் புயல் வலுவிழந்து நாளை மாலை - இரவு வேளையில் கரையை கடக்கும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.சென்னைக்கு கிழக்கே 520 கி.மீ. தொலைவில் உள்ள கஜா புயல் சென்னை நோக்கி நகருவது என்பது நடக்காத விஷயம் என்றும் அவர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

சென்னையை பொறுத்தவரை நாளை காலை முதல் மழை பெய்ய தொடங்கும் என்றும் சென்னை நகர் மற்றும் புறநகரில் நல்ல மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் பதிவிட்டுள்ளார்.இதனிடையே கஜா புயல் வங்க கடலில் இருந்து இடம்பெயர்ந்து அரபிக்கடல் பகுதிக்கு செல்லும் போது, சூறாவளி காரணமாக தொடர்ந்து சென்னையில் 16-17ம் தேதிகளிலும் மழை பெய்யும் என்றும் அவர் கூறினார்.

இதனிடையே கஜா புயல் காரணமாக நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், தேனி மற்றும் ராமநாதபுரம், கோவையில் உள்ள மலைத் தொடர்ச்சி பகுதிகள், டெல்டா பகுதிகள் மற்றும் விருதுநகர் ஆகிய இடங்களில் அதிக கனமழை பெய்யும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் நெல்லை மற்றும் இதர வடத் தமிழக உள் மற்றும் கடலோர மாவட்டங்களிலும்  மழை பெய்யும் என்று அவர் பதிவிட்டுள்ளார். இதற்கிடையே கஜா புயல் எந்த குறிப்பிட்ட இடத்தில் கரையை கடக்கும் என்பதை கணிக்க இயலாது என்றும் 2 நாட்களுக்கு முன்னதாகவே புயல் கரையை கடக்கும் பகுதியை கணித்தால் கணிப்பில் +50 அல்லது -50 கிமீ தூர மாறுபாடு இருக்க தான் செய்யும் என்றும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: