ரிசர்வ் வங்கியில் இருந்து மத்திய அரசுக்கு 4.7 லட்சம் கோடியை கைமாற்றுவாரா அல்லது பதவி விலகுவாரா உர்ஜித்?

* ரிசர்வ் வங்கியிடம் சுமார் 9.7 லட்சம் கோடி இருப்பு உள்ளது. இதில் 3.6 லட்சம் கோடியை மத்திய அரசு கேட்பதாக தகவல் வெளியானது.

* பிற நாடுகளை போல இருப்பு அளவை 14 சதவீதமாக குறைத்தால் உபரியாக உள்ள 5 லட்சத்தை ரிசர்வ் வங்கி அளிக்க வேண்டும் என மத்திய அரசு விரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதுடெல்லி, நவ.13: ரிசர்வ் வங்கியில் கூடுதலாக இருக்கும் 4.7 லட்சம் கோடியை மத்திய அரசுக்கு மாற்றி விடுவாரா அல்லது ரிசர்வ் வங்கியின் கவர்னர் உர்ஜித் படேல்பதவி விலகுவாரா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அடுத்த ஆண்டு ஏப்ரலில்  மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால், நாட்டின் பணப் புழக்கம் தாராளமாக இருக்க வேண்டும் என்பதோடு, பொருளாதார நிலைமையும் வளர்ச்சிப் பாதையில் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு கருதுகிறது. இதனால் ரிசர்வ் வங்கிக்கு நெருக்கடி கொடுப்பதாக பரபரப்பு எழுந்தது. இதை தொடர்ந்து வரும் 19ம் தேதி நடக்கும் ரிசர்வ் வங்கி கூட்டத்தில் அதன் கவர்னர் உர்ஜித் படேல் பதவி விலகுவார் எனவும் தகவல்கள் வெளியாகின.

பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க ரிசர்வ் வங்கிகள் போதுமான அளவு ரொக்கமாகவும், தங்கமாகவும் இருப்பு வைத்திருக்கும். அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் உள்ள ரிசர்வ் வங்கிகள் தங்களிடம் 13 சதவீதம் முதல் 14 சதவீதம் வரையிலான நிதியை சேமித்து வைத்துக் கொள்கின்றன. ஆனால், இந்தியாவில் ரிசர்வ் வங்கி 27 சதவீதம் அளவுக்கு நிதியை இருப்பு முதலீடாக வைத்துள்ளது. இந்நிலையில்தான், ரிசர்வ் வங்கி தன்னுடைய இருப்பு முதலீட்டில் இருந்து 3.6 லட்சம் கோடி நிதியை விடுவிக்க வேண்டும் என்று மத்திய அரசு அழுத்தம் கொடுத்ததாக சர்ச்சை எழுந்தது. ஆனால், ரிசர்வ் வங்கியிடம் இருந்து எந்த நிதியையும் (3.6 லட்சம் கோடி) விடுவிக்க மத்திய அரசு கோரவில்லை எனவும், அதனுடைய இருப்பு முதலீட்டை சீர்செய்வது தொடர்பான நடவடிக்கையையே மேற்கொண்டதாகவும் நிதி அமைச்சக உயர் அதிகாரி விளக்கம் அளித்தார்.

இதற்கு முன்பு ரிசர்வ் வங்கி தன்னிடம் இருந்த இருப்பு முதலீட்டில் உபரியாக இருந்த நிதியை மத்திய அரசுக்கு வழங்கியுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர். தற்போது ரிசர்வ் வங்கியிடம் 36.17 லட்சம் கோடி கையிருப்பு உள்ளது. இதில், இருப்பு முதலீடு 27 சதவீதம். அதாவது 9.7 லட்சம் கோடி இருப்பாக வைத்துள்ளது. இந்த நிதியை, முன்னணி நாடுகளின் மத்திய வங்கிகளை போன்று 14 சதவீதமாக குறைக்க வேண்டும் என்று மத்திய அரசு விரும்புகிறது. அப்படி குறைக்கப்பட்டால் உபரி நிதியாக 4.7 லட்சம் கோடி மிஞ்சும். இதை விடுவிக்க வேண்டும் என்று அரசு விரும்புகிறது.மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பொருளாதாரம் வளர்ச்சி பாதையில் செல்வதற்காகவும் பணப் புழக்கம் தாராளமாக இருக்க வேண்டும் என்று கருதுவதால், அரசு இந்த நடவடிக்கையை விரும்புவதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஆனால், இது பாதுகாப்பான பொருளாதார நிலையை மாற்றி, அவசரக்காலத்துக்கு மட்டும் உதவும் வகையில்தான் இருக்கும் என்று ரிசர்வ் வங்கி தரப்பில் கூறப்படுகிறது. இதேபோன்றுதான் அர்ஜென்டினாவிலும் மத்திய வங்கியின் தலைவருக்கு அந்நாட்டு அரசு நிர்ப்பந்தம் கொடுத்து உபரி நிதியை கேட்டது. ஆனால், அதன் தலைவர் லூயிஸ் கேபிடோ பதவியை உதறிவிட்டு சென்றார். இப்போது அதேபோன்ற நிலைமை இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேலுக்கும் ஏற்பட்டுள்ளது. அவர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த மோதலில் ஜெயிக்கப்போவது யாராக இருந்தாலும், அது நாட்டின் பொருளாதார பாதுகாப்புடன் சம்பந்தப்பட்டது. அடிபடப்போவது மக்களா, அரசா என்பது விரைவில் தெரியும்.

அவகாசம் கோருகிறது ஆர்பிஐ

அதிக அளவில் கடன் மோசடி செய்தவர்கள் பெயர் விவரங்களை பகிரங்கமாக வெளியிடலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்பிறகும், ₹50 கோடிக்கு மேல் கடன் வாங்கி மோசடி செய்தவர்கள் பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிடவில்லை. உச்ச நீதிமன்ற உத்தரவை மதிக்காத ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) கவர்னர் உர்ஜித் படேலுக்கு அதிகபட்ச அபராதம் ஏன் விதிக்கக்கூடாது என கேள்வி எழுப்பிய மத்திய தகவல் ஆணைய ஆணையர் தர் ஆச்சார்யலு, இதுதொடர்பாக நவம்பர் 16க்குள் விளக்கம் அளிக்க உத்தரவிட்டது. ஆனால் இந்த அவகாசத்தை வரும் 26ம் தேதி வரை நீட்டிக்குமாறு ரிசர்வ் வங்கிகேட்க உள்ளதாக தெரிகிறது. ஆணையர் பதவிக்காலம் 20ம் தேதியுடன் முடிவடைகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: