புதிய தலைமைச் செயலக கட்டிட ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு துறைக்கு மாற்றியது சட்டவிரோதம்: திமுக தரப்பு வக்கீல் பரபரப்பு வாதம்

சென்னை:  சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் திமுக ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட புதிய தலைமை செயலகம் கட்டிய விவகாரம் தொடர்பாக விசாரிக்க உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ரகுபதி தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அதிமுக அரசு கடந்த 2011ல் அமைத்தது. இந்த விசாரணை ஆணையத்தை எதிர்த்து அப்போதைய திமுக தலைவர் மு.கருணாநிதி, தற்போதைய தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் ஆணையத்திற்கு இடைக்கால தடை விதித்தது. இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, விசாரணை ஆணையம் என்பதே கண் துடைப்பு நாடகம்தான். இதனால் மக்கள் பணம்தான் வீணாகிறது என்று நீதிபதி கருத்து தெரிவித்தார். இதையடுத்து, நீதிபதி ரகுபதி தனது பதவியை ராஜினாமா செய்தார். வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அட்வகேட் ஜெனரல் ஆஜராகி, புதிய விசாரணை ஆணையம் அமைக்கப்படாது என்றார்.

 இந்நிலையில், ரகுபதி ஆணையத்தின் ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறையிடம் ஒப்படைத்து விசாரணையைத் தொடங்க தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. இந்த ஆணையை எதிர்த்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மு.க.ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோர் சார்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜராகி, நீதிபதி ரகுபதி ஆணையத்திடம் உள்ள ஆவணங்களை அரசிடம் ஒப்படைக்காமல் நேரடியாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அனுப்பும் வகையில் ஆணை பிறப்பித்தது சட்டவிரோதமான செயலாகும் என்று வாதிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநில தலைமைக் குற்றவியல் வக்கீல் ஏ.நடராஜன் வாதிடும்போது அரசுத் தரப்பில் ஆவணங்களைப் பரிசீலித்தபிறகுதான் ஆணை பிறப்பிக்கப்பட்டது என்றார். இருதரப்பிலும் சுமார் 40 நிமிடங்கள் காரசார விவாதம் நடந்தது. இதையடுத்து, விசாரணை நாளை தொடரும் என்று நீதிபதி உத்தரவிட்டார். வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: