காசிமேடு சூரியநாராயண தெருவில் சமூகவிரோதிகள் கூடாரமான மயானம்: பொதுமக்கள் வேதனை

பெரம்பூர்: காசிமேடு சூரியநாராயண தெருவில் உள்ள மயானத்தை மாநகராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால் சமூகவிரோதிகள் கூடாரமாக மாறியுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். காசிமேடு சூரியநாராயண தெருவில் இந்துக்கள் சுடுகாடு உள்ளது. இங்கு, தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை, வண்ணாரப்பேட்டை, புதுவண்ணாரப்பேட்டை ஆகிய பகுதி மக்கள் இறுதிச் சடங்குகளை மேற்கொண்டு வருகின்றனர். தினசரி 4 முதல் 5 சடலங்கள் வரை இங்கு அடக்கம் செய்யப்படும் நிலையில், இந்த சுடுகாட்டில் ஒரே ஒரு எரியூட்டும் தகன மேடை மட்டும் உள்ளதால், இறுதிச் சடங்கு மேற்கொள்ள வருபவர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.

எனவே, இங்கு கூடுதலாக ஒரு தகன மேடை அமைக்க வேண்டும், என இப்பகுதி மக்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இதுவரை நடவடிக்கை இல்லை. இந்நிலையில், இங்கு அமைக்கப்பட்டுள்ள பெரும்பாலான மின் விளக்குகள் பழுதடைந்து எரிவதில்லை.

இதனால், இரவில் இருள் சூழ்ந்து காணப்படுவதால், இரவு நேரங்களில் சடலங்களை புதைக்க வருபவர்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். அதுமட்டுமின்றி இந்த இருளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி இங்கு சிலர் மது அருந்துவது, கஞ்சா அடிப்பது உள்ளிட்ட சமூக விேராத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, சுடுகாட்டை முறையாக பராமரித்து, அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும், என இப்பகுதி மக்கள் மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும், கண்டும் காணாமல் உள்ளனர். வடசென்னையின் பிரதான சுடுகாடாக விளங்கும் இதனை சீரமைக்க உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: