திரு.வி.க பூங்காவில் செயற்கை காடு: மெட்ரோ ரயில் நிர்வாகம் அமைத்துள்ளது

சென்னை: திரு.வி.க பூங்காவில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட ‘மியாவாகி டெக்னிக்’ எனப்படும் செயற்கை காடுகளை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் உருவாக்கியுள்ளது. திரு.விக பூங்காவிற்கு அடியில் 17 மீட்டர் ஆழத்தில் ஷெனாய் நகர் மெட்ரோ ரயில் பணிகள் சுரங்க வழித்தடத்தில் நடைபெற்று வந்தது. இதனால், சென்னை மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வந்த 9 ஏக்கர் நிலப்பரப்பிலான திரு.வி.க பூங்கா கடந்த 2010ம் ஆண்டு மூடப்பட்டது. இதனால், இந்த பூங்காவில் நடைபயிற்சி செல்லமுடியாததுடன், விடுமுறை தினங்களில் சிறுவர்கள் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், சுரங்கபாதை வழித்தட பணிகள் முடிந்ததையடுத்து ஷெனாய் நகர் மெட்ரோ ரயில் நிலையம் திறக்கப்பட்டது. எனவே, மெட்ரோ ரயில்வே பணிக்காக சேதப்படுத்தப்பட்ட திரு.வி.க பூங்காவை மறுசீரமைப்பு செய்துதர மெட்ரோ ரயில் நிர்வாகம் முன்வந்தது. இதேபோல், இந்த பூங்காவில் முன்பு இருந்ததை விட நீருற்று, கூழாங்கற்களிலான நடைபாதை, டென்னிஸ் மைதானம், வண்ணமலர் செடிகள், பொதுமக்கள் ஓய்வு எடுக்க இருக்கைகள் உள்ளிட்டவைகளை மெட்ரோ ரயில் நிர்வாகம் அமைத்து வருகின்றது.

இதை ஒட்டி இந்த பூங்காவில் மூலிகை மரங்களை உள்ளடக்கிய செயற்கை காடுகளை உருவாக்கும் பணியிலும் மெட்ரோ ரயில் நிர்வாகம் ஈடுபட்டு வந்தது. ஏற்கனவே, கடந்த வருடம் கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தில் இந்த வகை ‘மியாவாகி டெக்னிக்’ எனப்படும் செயற்கைகாடுகள் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது, திரு.வி.க பூங்காவின் நான்கு புறங்களிலும் 432 சதுர மீட்டர் பரப்பளவில் இந்த செயற்கை காடுகள் உருவாக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த காடுகளில் அரச மரம், வேம்பு, நாவல், நீர் மருது, மாமரம், அத்தி, பகுனியா, வில்வம், மகாகனி, ஈழிலை பாலை, மலை வேம்பு, அசோகா, ரோஸ் உட், பூவரசு, அரளி, மகிழம், நெல்லி, தேக்கு, புன்னை, பவலமல்லி, இழுப்பை, மந்தாரை உள்ளிட்ட 30 வகையான மரங்கள் உள்ளது. இந்த வகையான செயற்கை காடுகள் மூலம் சுற்றுப்புற சூழல் பாதுகாக்கப்படுகிறது. காலை மற்றும் மாலை நேரங்களில் பூங்காக்களுக்கு வருபவர்களுக்கு இந்த காடுகள் பயனுள்ளதாக அமைந்துள்ளது. இதேபோல், 6 முதல் 8 மாதங்களுக்குள்ளான குறுகிய காலத்தில் இந்த காடுகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: