ஆந்திர மாநிலம் குப்பம் தொகுதியில் பாலாற்றில் மேலும் 21 தடுப்பணை கட்ட ரூ.41.70 கோடி ஒதுக்கீடு தமிழக விவசாயிகள் கடும் அதிர்ச்சி

திருமலை: ஆந்திர மாநிலம் குப்பம் சட்டமன்ற தொகுதியில் உள்ள பாலாற்றில் மேலும் 21 தடுப்பணைகள் கட்ட ரூ.41.70 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது தமிழக விவசாயிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் சொந்த தொகுதியான சித்தூர் மாவட்டம், குப்பம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாலாற்றில் 21 தடுப்பணைகள் கட்ட அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி குப்பம் தொகுதியில் உள்ள குப்பம், வி.கோட்டா, சாந்திபுரம், ராமகுப்பம் ஆகிய 4 மண்டலங்களுக்கு இடையே செல்லக்கூடிய பாலாற்றின் மீது 21 தடுப்பணைகளை கட்ட நீர்ப்பாசனத்துறை சார்பில்  ரூ.41.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தடுப்பணைகள் கட்டுவதால்  4 மண்டலங்களில் நிலத்தடி நீர் மட்டம் அதிகரித்து, 5527 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என மாநில நீர்ப்பாசனத்துறை செயலாளர் சக்திபூஷண்குமார் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, ஆந்திராவில் பல இடங்களில் தடுப்பணைகள் கட்டி உயர்த்தப்பட்டுள்ளதன் காரணமாக பாலாற்றில் மழை பெய்து தண்ணீர் வரும்போது தமிழகத்திற்கு வரும் நீரின் அளவு வெகுவாக குறைந்துள்ளது. தற்போது தமிழக - ஆந்திர எல்லையான குப்பம் தொகுதியில் 4 மண்டலங்களில் மேலும் 21 தடுப்பணைகள் கட்ட நிதி ஒதுக்கியிருப்பது வேலூர் மாவட்ட விவசாயிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இதுகுறித்து வேலூர் மாவட்ட விவசாய சங்க பிரதிநிதிகள் கூறுகையில், ‘ஏற்கனவே ஆந்திர அரசு பாலாறு மற்றும் பொன்னையாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டி தமிழகத்திற்கு வரக்கூடிய தண்ணீரை முற்றிலும் தடுத்துவருகிறது. இதற்கு தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மவுனம் காத்து வருகிறது. குறிப்பாக வேலூர் மாவட்டம் ஏற்கனவே வறட்சி பகுதியாக உள்ளது. கடும் மழையின்போது கிடைக்கும் ஓரளவு தண்ணீரை கூட வரவிடாமல் தடுத்து வருகின்றனர். இதுபோதாது என தற்போது மேலும் 21 தடுப்பணைகள் கட்டப்படும் என வெளியான தகவல் மிகுந்த அதிர்ச்சியை தருகிறது. உடனடியாக தமிழக அரசு இதை தடுத்து நிறுத்த விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: