பாஜகவை தோற்கடிப்பது தான் மார்க்சிஸ்ட் கட்சியின் இலக்கு : ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி

நாகர்கோவில்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை ஆலோசனை குழு (பொலிட் பீரோ) உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் நாகர்கோவிலில் நிருபர்களுக்கு நேற்று அளித்த பேட்டி :

தமிழகத்தில் கல்வித்துறையில் ஊழல்கள் மிகுந்து விட்டது. தரம் வாய்ந்த அறிஞர்களையும், ஆராய்ச்சியாளர்களையும் உருவாக்க வேண்டிய பல்கலைக்கழகங்கள் தரம் தாழ்ந்து செயல்படுகின்றன. இவை அனைத்தையும் தமிழக அரசு வேடிக்கை பார்த்து வருகிறது. நிர்மலாதேவி விவகாரத்தில் வெளிப்படை தன்மையுடன் விசாரணை அமைய வேண்டும்.

பண மதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி. நடவடிக்கையால் நாடு முழுவதும் சிறு மற்றும் குறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால், சிறு, குறு தொழில்களை மத்திய அரசு ஊக்குவித்து வருவதாக பிரதமர் மோடி கூறியிருப்பது தேர்தலுக்கான ஏமாற்று வேலை ஆகும். ஒரு சிலை அமைப்பதற்கு ₹3 ஆயிரம் கோடி, அதன் விளம்பரத்துக்கு ₹5 ஆயிரம் கோடி என ₹8 ஆயிரம் கோடியை செலவழித்து இருக்கிறார்கள். விளம்பர ஆட்சியாக, மோடி அரசு செயல்படுகிறது. மத்திய அரசு திவாலாகி போனதுதான், ரிசர்வ் வங்கியுடனான மோதலுக்கு காரணம்.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.வை தோற்கடிக்க வேண்டும் என்பதுதான் மார்க்சிஸ்ட் கட்சியின் முக்கிய இலக்காக இருக்கிறது. அதே சமயத்தில் நாங்கள் அமைக்க இருக்கும் கூட்டணி, மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும். இதை கட்சியின் தலைமை ஆலோசித்து முடிவு செய்யும்.

தமிழக அரசு மத்திய அரசின் கிளையாக செயல்படுகிறது. அடிமைகள் என்றுமே, தங்களை அடிமைகள் என்று ஒத்துக்கொண்டதில்லை. வழக்குகளுக்கு அமைச்சர்கள் பயப்படுகிறார்கள். தீபாவளியையொட்டி பல்வேறு அரசு அலுவலகங்களில் சோதனை நடத்தி கணக்கில் இல்லாத பணம் கைப்பற்றப்படுகிறது. அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை ஊழல் செய்கிறார்கள் என்பதன் வெளிப்பாடாக இது அமைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: