மணலி கன்னியம்மன்பேட்டையில் பாம்புகள் உலாவிடமாக மாறிய மயானம்: பொதுமக்கள் அச்சம்

திருவொற்றியூர்: மணலி கன்னியம்மன்பேட்டை மயானம் முறையான பராமரிப்பு இல்லாததால் புதர்மண்டி காணப்படுவதுடன், பாம்புகள் வசிப்பிடமாக மாறியுள்ளது.மணலி மண்டலம், 16வது வார்டுக்கு உட்பட்ட கன்னியம்மன் பேட்டையில் மாநகராட்சி மயானம் அமைந்துள்ளது. அப்பகுதியை சேர்ந்த யாராவது இறந்தால் இந்த மயானத்தில் தான் எரிக்கவோ, புதைக்கவோ செய்வது வழக்கம். இந்நிலையில், இந்த மயானத்தை மாநகராட்சி அதிகாரிகள் முறையாக பராமரிப்பதில்லை. இதனால், செடி கொடிகள் வளர்ந்து புதர்மண்டி உள்ளது. மின்விளக்குகள், குடிநீர் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியும் இல்லாததால் பொதுமக்கள் இறந்தவர்களுக்கு இறுதிச் சடங்கு செய்ய முடியாமல் சிரமப்படுகின்றனர்.

தற்போது, இங்குள்ள முட்புதரில் விஷ பாம்புகள் அதிகளவில் சுற்றித்திரிவதால், பொதுமக்கள் சடலத்தை அடக்கம் செய்ய வரும்போது சிரமப்படுகின்றனர். மேலும் இரவு நேரங்களில் பிணத்தை சுமந்துவருவதற்கு அச்சப்படுகின்றனர்.எனவே, இந்த மயானத்தை சீரமைத்து இங்கு மின்விளக்குகள், குடிநீர் வசதிகள் செய்து தர வேண்டும், புதர்களை அகற்றி முறையாக சீரமைக்க வேண்டும், என மக்கள் மணலி மண்டல அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘கன்னியம்மன் பேட்டை ஊராட்சியாக இருக்கும்போது இங்குள்ள மயானத்தை அதிகாரிகள் முறையாக பராமரித்தனர். ஆனால் மாநகராட்சியாக மாற்றப்பட்ட பிறகு இந்த மயானத்தை பராமரிப்பதே இல்லை. அடிப்படை வசதிகள் இல்லாத இந்த மயானத்தில் இறுதி சடங்குகளை மேற்கொள்ள முடியாமல் அவதிக்குள்ளாகிறோம். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மயானத்தை சீரைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: