இடைத்தேர்தல் நடந்தால் அரவக்குறிச்சி, தஞ்சை தொகுதிகளில் மீண்டும் பண மழை பொழியும்

திருச்சி: தமிழகத்தில் கடந்த 2016ம் ஆண்டு நடந்த சட்டமன்ற பொது தேர்தலில் அரவக்குறிச்சி, தஞ்சை ஆகிய தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.  அதிகளவில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கப்பட்டதால் தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை எடுத்தது. 5 மாதம் கழித்து மீண்டும் தேர்தல் நடந்த போதும் இரு தொகுதிகளிலும் பணம் வாரியிறைக்கப்பட்டது. பணப்புழக்கத்தை தடுக்க தேர்தல் ஆணையம் எடுத்த நடவடிக்கைகள் பலனளிக்கவில்லை. இந்நிலையில் தகுதி நீக்கம் ெசய்யப்பட்ட 18 பேரில் அரவக்குறிச்சி எம்எல்ஏ செந்தில் பாலாஜி, தஞ்சை எம்எல்ஏ ரெங்கசாமி ஆகியோரும் அடக்கம். இந்த இரு தொகுதிகளிலும் மீண்டும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. செந்தில் பாலாஜி ஏற்கனவே அமைச்சராக இருந்தவர். தற்போது தினகரன் கட்சியில் முக்கிய பிரமுகராக உள்ளார். அமமுகவில் அமைப்பு செயலாளர், மாவட்ட செயலாளர் ஆகிய பதவிகளை வகிக்கிறார். சசிகலா குடும்பத்துக்கு மிக நெருக்கமானவர் என்று அழைக்கப்படுபவர்.

அதேபோல் ரெங்கசாமி சசிகலாவுக்கு உறவினர். கடந்த தேர்தலில் சசிகலா மூலம் தான் இவர் எம்எல்ஏ சீட் வாங்கினார் என்று கூறப்படுகிறது. அமமுகவில் பொருளாளர் பதவி வகிக்கிறார். செந்தில் பாலாஜியும், ரெங்கசாமியும் அமமுகவில் முக்கியமானவர்கள் என்பதால் தேர்தலில் எப்படியும் வென்றே ஆக ேவண்டும் என்ற கட்டாயத்தில் 2 பேரும் களம் இறங்குவார்கள். அதேபோல் இந்த இருவரையும் வீழ்த்தியே ஆக வேண்டும் என்ற வேகத்தில் அதிமுகவும் தேர்தலை சந்திக்கும். அரவக்குறிச்சி தொகுதி அதிமுக பொறுப்பாளர்களாக மக்களவை துணைத்தலைவர் தம்பித்துரை, அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த இருவருக்கும், செந்தில் பாலாஜிக்கும் ஏழாம் பொருத்தம். அரவக்குறிச்சியில் மீண்டும் போட்டியிட்டு செந்தில் பாலாஜி டெபாசிட் வாங்கி விட்டால், அரசியலை விட்டே விலக தயார் என்று அண்மையில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சவால் விடுத்தார்.

தஞ்சை தொகுதியில் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரும், எம்பியுமான வைத்திலிங்கம் தலைமையில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ரெங்கசாமியை வீழ்த்த வேண்டும் என்று வைத்திலிங்கமும் கங்கணம்கட்டி செயல்படுவார். எனவே மற்ற தொகுதிகளை காட்டிலும் அரவக்குறிச்சி, தஞ்சையில் தேர்தல் களம் அனல் பறக்கும். எப்போதும் போல் பண மழையும் கொட்டும். வாக்காளர்களை கவர பணம் மட்டுமின்றி வேட்டி, சேலை உள்ளிட்ட பரிசு பொருட்களும் வாரி வழங்கப்படும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: