சிபிஐ இயக்குநராக அலோக் வர்மா, சிறப்பு இயக்குநராக ராகேஷ் அஸ்தானா நீடிக்கின்றனர்: சிபிஐ செய்திதொடர்பாளர் தகவல்

டெல்லி: சிபிஐ இயக்குநராக அலோக் வர்மா மற்றும் சிறப்பு இயக்குநராக ராகேஷ் அஸ்தானா நீடிக்கின்றனர் என சிபிஐ செய்திதொடர்பாளர் தெரிவித்துள்ளார். இறைச்சி ஏற்றுமதியாளரான மொயின் குரோஷி வழக்கில், 5 கோடி  ரூபாயை லஞ்சமாகக் கொடுத்தால் தொழிலதிபர் சனா பாபுவை விடுவிப்பதாக, அதிகாரிகள் சார்பில் மனோஜ் பிரசாத், சோமேஷ் பிரசாத் ஆகியோர் பேரம் பேசியுள்ளனர். மொத்த தொகையான ரூ.5 கோடியில், முன்பணமாக 3  கோடி ரூபாயை 5  தவணைகளில் 2017 டிசம்பர் முதல் அக்டோபர் 2018 வரையிலும் கொடுத்துள்ளதாகவும், ஆதாரங்களை சனாபாபு சிபிஐ அதிகாரிகளிடம் வழங்கியுள்ளார். இதன் பின்னர், கடந்த மாதம் 25ம் தேதி குடும்பத்துடன்  ஐதராபாத்திலிருந்து பாரிஸ் புறப்பட்ட சனாபாபு, விமான நிலையத்தில் ‘லுக் அவுட்’ நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருந்ததால் தடுத்து நிறுத்தப்பட்டார். அப்போது எஞ்சிய தொகையைான 2 கோடி ரூபாயை கொடுக்குமாறு  குற்றம்சாட்டப்பட்ட சிபிஐ அதிகாரிகள் பேரம் பேசியதாக, டெல்லி சிபிஐ 3வது யூனிட்டின் எஸ்பி எஸ்.எஸ்.குரூம் என்பவரிடம், சனா பாபு கடந்த 15ம் தேதி புகார் கொடுத்துள்ளார்.

சனாபாபுவின் வாக்குமூலம் மாஜிஸ்திரேட் முன்னிலையில் பதிவு செய்யப்பட்டு, சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா, டெல்லி சிபிஐ அமைப்பின் எஸ்ஐடி - டிஎஸ்பி தேவேந்திரகுமார், புரோக்கர் மனோஜ்  பிரசாத், சிறப்பு  இயக்குனர் அஸ்தானாவின் உறவினர் சோமாஸ் பிரசாத் ஆகிய நான்கு பேர் மீது, ஐபிசி 120 பி, பிரிவு 7, 13 (2), 13 (1) (டி), ஊழல் தடுப்புச் சட்டத்தின் 1988 பிரிவு 7 ஏ, திருத்தப்பட்ட ஊழல் தடுப்புச் சட்டத்தின் 2018  ஆகிய  பிரிவுகளில், எஸ்பி எஸ்.எஸ்.குரூம் வழக்குப்பதிவு செய்தார். இந்தநிலையில் இந்த வழக்கில் சிபிஐ டிஎஸ்பி தேவந்தர் குமார் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து சிபிஐ இயக்குநராக இருந்த அலோக் வர்மா, சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவுக்கு கட்டாய விடுப்பு விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது. மேலும் சிபிஐ புதிய இயக்குநராக நாகேஸ்வர ராவை மத்திய அரசு  நியமனம் செய்தது. ஊழல் குற்றச்சாட்டு நிலுவையில் உள்ள நிலையில் கட்டாய விடுப்பு என்பதை ஏற்க முடியாது என அலோக் வர்மா, ராகேஷ் அஸ்தானா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அலோக் வர்மா, ராகேஷ்  அஸ்தானா தொடர்ந்த மனுவை வெள்ளிக்கிழமை விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இருவர் மீதும் குற்றச்சாட்டு உள்ளதால் இயக்குநருக்கான பணிகள், பொறுப்புகள்  நாகேஷ்வர் ராவுக்கு வழங்கப்பட்டன என்றும் சிபிஐ இயக்குநராக அலோக் வர்மா மற்றும் சிறப்பு இயக்குநராக ராகேஷ் அஸ்தானா நீடிக்கின்றனர் என சிபிஐ செய்திதொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: