திருவனந்தபுரம் நவராத்திரி விழாவில் பங்கேற்ற சுவாமி விக்ரகங்களுக்கு உற்சாக வரவேற்பு

தக்கலை: திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நவராத்திரி விழாவில் பங்கேற்று பத்மனாபபுரம் வந்தடைந்த சரஸ்வதி தேவிக்கு தாலப்பொலியுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. பத்மனாபபுரம் அரண்மனை தேவாரக்கட்டு சரஸ்வதி தேவி, சுசீந்திரம் முன்னுதித்த நங்கை, வேளிமலை குமாரசாமி ஆகிய விக்ரகங்கள்  திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவிற்காக சென்று வருவது வழக்கம். இவ்விழாவில் பங்கேற்க கடந்த 7 ம் தேதி  விக்ரகங்கள் புறப்பட்டு 9 ம்தேதி திருவனந்தபுரம் சென்றடைந்தன. அங்கு 10 ம் தேதி முதல் 19ம் தேதி வரை நடைபெற்ற பூஜையில் பங்கேற்ற விக்ரகங்கள் ஒரு நாள் நல்லிருப்புக்கு பிறகு 21 ம் தேதி குமரி மாவட்டத்துக்கு புறப்பட்டன.

22ம் தேதி நெய்யாற்றின்கரையில் தங்கி அங்கிருந்து புறப்பட்டு நேற்று முன் தினம் குழித்துறை வந்தது. தொடர்ந்து நேற்று அங்கிருந்து புறப்பட்ட விக்ரகங்கள்  மாலை  பத்மனாபபுரம் வந்தடைந்தது. பத்மனாபபுரம் கோட்டை வாசல் அருகில் வந்ததும் சரஸ்வதி தேவிக்கு பெண்கள் தாலப்பொலியுடன் வரவேற்பு மற்றும் போலீசாரின் அணி வகுப்பு மரியாதையும் நடந்தது. அப்போது இடியுடன் கூடிய மழை பெய்தது. தொடர்ந்து வேளிமலை முருகன் விக்ரகம் குமாரகோவிலுக்கும்,  முன்னுதித்த நங்கை விக்ரகம்  சுசீந்திரத்துக்கும் பல்லக்குகளில் புறப்பட்டது.

சரஸ்வதி தேவி அரண்மனை தேவாரக்கட்டை சென்றடைந்ததும்  போலீசார் மரியாதை செலுத்தினர். பின்னர் அரண்மனை ஹோமப்புரையில் உள்ள ஆறாட்டு குளத்தில் போலீஸ் மரியாதையுடன் ஆறாட்டு நடந்தது. நல்லெண்ணெய், பால், பன்னீர், தயிர், மஞ்சள், களபம், சந்தனம், இளநீர், குங்குமம், பஞ்சாமிர்தம், நெய் ஆகியவற்றால் ஆறாட்டு செய்யப்பட்டது. தொடர்ந்து அபிஷேகம் நடைபெற்றதும் சாமியை கோவிலுக்கும், உடைவாள் உப்பரிகை மாளிகைக்கும் கொண்டு செல்லப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: