ரூ.2.5 கோடி மதிப்பீட்டில் ஆகாயத் தாமரையில் இருந்து பயோ காஸ் உற்பத்தி மையம் சென்னையில் அமைகிறது

சென்னை: சென்னை மாநகராட்சியில் ஆகாயத் தாமரையில் இருந்து பயோ  காஸ் தயாரிக்கும் மையம் ரூ.2.5 கோடி செலவில் அமையுள்ளது.

சென்னையில் மாநகராட்சியில் உள்ள சில அம்மா உணவகங்களில் உணவு கழிவுகளில் இருந்து பயோ காஸ் உற்பத்தி செய்யும் முறை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனைத் தவிர்த்து வீடுகளில் இருந்து சேகரிக்கப்படும் உணவு கழிவுகளில் இருந்தும் பயோ காஸ் தயாரிக்கப்படுகிறது. இந்நிலையில், ஆகாயத் தாமரையில் இருந்து பயோ காஸ் தயாரிக்கும் வகையிலான ஒரு மையத்தை சென்னை மாநகராட்சி அமைக்கிறது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட நீர்நிலைகளிலிருந்து நாள் ஒன்றுக்கு டன் கணக்கில் ஆகாயத்தாமரைகள் அகற்றப்படுகின்றன. இந்த ஆகாயத் தாமரைகள் அனைத்தும் கொடுங்கையூர் குப்பை கிடங்களில்தான் கொட்டப்படுகிறது. இதிலிருந்து பயோ காஸ் தயாரிக்க சென்னை மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி, சென்னை மாநகராட்சியை சேர்ந்த இரண்டு பொறியாளர்கள் பெங்களூருவில் அமைக்கப்பட்ட இந்த மாதிரியான ஒரு மையத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அவர்கள் அளித்த அறிக்கையின் அடிப்படையில் மணலி மண்டலத்திற்குட்பட்ட பகுதியில் 5 டன் கொள்ளளவு கொண்ட ஒரு பயோ காஸ் மையம் அமைக்கப்படவுள்ளது.

இதற்காக ரூ.2.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் மையத்தின் கட்டுமான பணிகளுக்கு ரூ.80 லட்சமும், உள்கட்டமைப்பு பணிகளுக்கு ரூ.1.70 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தயாரிக்கப்படும் காஸனாது அம்மா உணவகம் மற்றும் பல்வேறு திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும். ஆகயாத்தாமரை இல்லாத நேரங்களில் உணவுக் கழிவுகளை கொண்டும் காஸ் தயாரிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: