பல்லாவரம் சிக்னல் அருகே ஜிஎஸ்டி சாலையில் அமைக்கப்பட்டுள்ள டிரான்ஸ்பார்மரால் விபத்து அபாயம் வாகன ஓட்டிகள் அச்சம்

பல்லாவரம்: பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் சிக்னல் அருகே போக்குவரத்துக்கு இடையூறாக அமைக்கப்பட்டுள்ள மின் மாற்றியால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் தற்போது மெட்ரோ ரயில் திட்ட பணிகள் நடைபெற்று வருவதால், தாம்பரம் மார்க்கத்தில் இருந்து சென்னை விமான நிலையம், கிண்டி, கோயம்பேடு, பிராட்வே உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் பல்லாவரம் சிக்னலில் இருந்து இந்திராகாந்தி சாலை வழியாக சிறிது தூரம் மாற்றுப் பாதையில் இயக்கப்படுகின்றன.

இதனால், அப்பகுதியில் 24 மணி நேரமும் நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. குறிப்பாக காலை, மாலை நேரங்களில் வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நிற்கின்றன. இந்நிலையில், பல்லாவரம் சிக்னல் அருகே கிண்டி மார்க்கமாக செல்லும் ஜிஎஸ்டி சாலையில், நடைபாதை மற்றும் சாலை பகுதியை சேர்த்தபடி டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் அந்த டிரான்ஸ்பார்மர் மீது மோதி அடிக்கடி விபத்தில் சிக்குவது வாடிக்கையாக உள்ளது. கனரக வாகனங்கள் செல்லும்போது டிரான்ஸ்பார்மர் மீது உரசி விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.

இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், ‘‘பல்லாவரம் ஜிஎஸ்டி சாலை போக்குவரத்து மிகுந்த பகுதியாக உள்ளது. இங்கு, சாலையில் அமைக்கப்பட்டுள்ள டிரான்ஸ்பார்மரால் அடிக்கடி விபத்து நடைபெறுவதுடன், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. நடைபாதையில் செல்லும் பாதசாரிகள் இந்த டிரான்ஸ்பார்மரின் கீழே புகுந்து ஆபத்தான முறையில் செல்கின்றனர். சாலையில் செல்லும் பேருந்து மற்றும் லாரி போன்ற கனரக வாகனங்கள் டிரான்ஸ்பார்மர் மீது உரசினால் பெரும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள இந்த டிரான்ஸ்பார்மரை வேறு இடத்தில் மாற்றி அமைக்க வேண்டும்,’’ என்றனர்.

ஆபத்தான மின்கம்பம்

ஆலந்தூர் - வேளச்சேரி சாலையில் சுப்ரமணியசாமி கோயில் தெரு சந்திப்பில், மின்வாரியம் சார்பில் மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன், இரவில் வந்த அடையாளம் தெரியாத வாகனம் இந்த மின்கம்பம் மீது மோதியதில் அடிப்பாகம் இரண்டாக உடைந்தது. தற்போது, அதில் உள்ள இரும்பு கம்பி உதவியுடன் மின் கம்பம் நின்று கொண்டிருக்கிறது. இந்த மின் கம்பம் எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழும் அபாயம் உள்ளது. இதனால், இப்பகுதி மக்கள் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர். எனவே, இந்த மின் கம்பத்தை உடனே அகற்றிவிட்டு, புதிய மின் கம்பம் அமைக்க வேண்டும், என அப்பகுதி மக்கள் ஆலந்தூரில் உள்ள மின் வாரிய அதிகாரியிடம் தெரிவித்தும், இதுவரை நடவடிக்கை இல்லை.

இதுபற்றி அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘மின் கம்பம் உடைந்தது குறித்து மின் வாரியத்தில் புகார் அளித்தபோது, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த அதிகாரி, அந்த பக்கம் வந்துகூட பார்க்கவில்லை. மீண்டும் புகார் அளித்தபோது, தற்போது மின்கம்பம் ஸ்டாக் இல்லை. பொதுமக்களே பணம் வசூல் செய்து கொடுத்தால் புதிய கம்பம் வாங்கி நடப்படும், என்கிறார். ஏற்கனவே, விலைவாசி உயர்வால் தவித்து வரும் நாங்கள், மின்கம்பம் வாங்க எங்கே போய் பணம் வசூல் செய்வது. மின்வாரிய அதிகாரிகள் விரைவில் இந்த மின்கம்பத்தை மாற்றி, புதிய மின் கம்பத்தை அமைக்காவிட்டால், மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம்,’’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: