கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் ஆய்வு: அங்கன்வாடி மையத்தை தொடங்கி வைத்தார்

சென்னை: கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் ஆய்வு மேற்கொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  மருத்துவ முகாம்கள், அங்கன்வாடி மையம்  ஆகியவற்றை தொடங்கி வைத்தார். திமுக தலைவரும், கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான மு.க.ஸ்டாலின், நேற்று காலை தனது தொகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பெரவள்ளூர் ஜிகேஎம் காலனி 25வது தெரு, ஜம்புலிங்கம் பிரதான சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். பின்னர், முகாமில் பங்கேற்றவர்களுக்கு மருந்து, மாத்திரைகளை வழங்கினார்.

இதைத்தொடர்ந்து பெரம்பூர், பேப்பர் மில் சாலை, ராஜாதோட்டம் பகுதியில் அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்து அதன் ஊழியர்களுக்கு மு.க.ஸ்டாலின் பரிசு பொருள் மற்றும் குழந்தைகளுக்கு பிஸ்கட் பாக்கெட் வழங்கினார். இதேபோல், திருவிக நகர் பஸ் நிலையம் எதிரே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த இலவச மருத்துவ முகாமை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இதில் பங்கேற்ற பொதுமக்களுக்கும் மருந்து, மாத்திரை வழங்கினார். முன்னதாக ஆய்வு செய்ய சென்ற மு.க.ஸ்டாலினுக்கு மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர். பொதுமக்களிடம் அவர் குறைகளை கேட்டறிந்தார். அவரிடம், ஜிகேஎம் காலனி, திருவிக நகர், பெரம்பூர் பகுதி மக்கள் மனு கொடுத்தனர். அதை பெற்றுக்கொண்ட மு.க.ஸ்டாலின், மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அப்போது, வடசென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் சேகர்பாபு எம்எல்ஏ, எம்எல்ஏக்கள் தாயகம் கவி, ரங்கநாதன், சட்டத்துறை செயலாளர் கிரிராஜன், மாநில மருத்துவரணி துணை செயலாளர் சரவணன் மற்றும் ஏராளமான திமுகவினர் உடன் சென்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: