வண்டலூர் பூங்காவில் இன்று வண்ணத்துப்பூச்சி பூங்கா திறப்பு

சென்னை: வண்டலூர்  அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் வண்ணத்துப்பூச்சி பூங்கா  இன்று முதல் பார்வையாளர்களுக்காக திறக்கப்படுகிறது என பூங்கா நிர்வாகம்  தெரிவித்துள்ளது. இதுகுறித்து, பூங்கா செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் வண்ணத்துப்பூச்சி பூங்கா 2.7 ஹெக்டேர் பரப்பளவில் 2015ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி பார்வையாளர்களுக்காக திறந்து வைக்கப்பட்டது. இந்த பூங்காவில் 200 வகையான தாவரங்கள் நடப்பட்டு 40 வகையான வண்ணத்துபூச்சிகள் வருகை புரிந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பருவ காலங்களில் மட்டுமே இவை வருகை தரும். 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் வர்தா புயலினால் வண்ணத்துப்பூச்சி பூங்கா மற்றும் இல்லம் வெகுவாக பாதிக்கப்பட்டு முற்றிலும் சேதம் அடைந்த நிலையில்,

வெவ்வேறு காலகட்டங்களில் படிப்படியாக வண்ணத்துப்பூச்சி பூங்கா பராமரிப்பு பணிகள் நடந்தன. இதை தொடர்ந்து கடந்த 2 மாதங்களாக பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டன. தற்போது வண்ணத்துப்பூச்சி பூங்கா பராமரிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் பூங்காவினுள் புதியதாக செடிகள் நடப்பட்டு உள் அரங்கமும் சீரமைக்கப்பட்டுள்ளது. இதனால் வண்ணத்துப்பூச்சிகள் மீண்டும் வரத் தொடங்கியுள்ளதால் இன்று (21.10.2018) முதல் உயிரியல் பூங்காவில் வண்ணத்துப்பூச்சி பூங்கா பார்வையாளர்களுக்காக திறக்கப்படுகிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: