நிலக்கரி விலை உயர்வால் செங்கல் விலை அதிகரிப்பு

* ஒரு லோடு செங்கல் தயாரிக்க ஒரு டன் கருவேல மர விறகு அல்லது முக்கால் டன் நிலக்கரி தேவை.

* மழையால் கருவேல மர விறகு டன்னுக்கு 800 அதிகரித்துள்ளது.

* டீசல், லாரி வாடகை அதிகரிப்பால் நிலக்கரி டன்னுக்கு 2,000 உயர்ந்துள்ளது.

கோவை: செங்கல் உற்பத்திக்கு தேவையான வேலி கருவேல மர விறகு, நிலக்கரி விலை உயர்ந்ததால் செங்கல் விலையும் அதிகரித்துள்ளது.  கோவையில் 100க்கு மேற்பட்ட செங்கல் சூளைகள் உள்ளது. 3 வாரம் முன்பு வரை 3 ஆயிரம் எண்ணிக்கை  கொண்ட செங்கல் லோடு 18,500 வரை விற்பனையானது. தற்போது 500 அதிகரித்து, 19,000 ஆக உள்ளது. விலை உயர்வு குறித்து கோவை செங்கல்  உற்பத்தியாளர்கள் கூறியதாவது: 3 ஆயிரம் எண்ணிக்கையிலான ஒரு லோடு செங்கல்  உற்பத்தி செய்ய ஒரு டன் வேலி கருவேல மரங்களின் விறகு அல்லது முக்கால் டன்  (750 கிலோ) நிலக்கரி தேவைப்படுகிறது. 3 வாரம்  முன்பு வரை ஒரு லோடு விறகு விலை 4,000ஆக இருந்தது.

சமீபத்தில் பெய்த மழையால், கருவேல மரங்கள் உள்ள  பகுதிகளை நீர் சூழ்ந்துள்ளது.  இதனால் இந்த மரங்களுக்கு கிராக்கி ஏற்பட்டு  ஒரு டன்னுக்கு 800 அதிகரித்துள்ளது. அதே போல் நிலக்கரி வெளிநாடுகளில்  இருந்து தூத்துக்குடிக்கு கப்பல் மூலம் இறக்குமதியாகி, அங்கிருந்து  கோவைக்கு விற்பனைக்கு வருகிறது. கடந்த ஆண்டு ஒரு டன் நிலக்கரி 5,500  இருந்தது. கடந்த சில மாதங்களாக இறக்குமதி நிலக்கரி வரத்து குறைவு மற்றும்  டீசல் விலை உயர்வு காரணமாக லாரி வாடகை அதிகரிப்பு ஆகியவற்றால் டன்னுக்கு  2 ஆயிரம் அதிகரித்து, 7,500க்கு விற்கப்படுகிறது. இதனால் செங்கல்  உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது.

 தற்போதைய உற்பத்தி செலவிற்கேற்ப 3 ஆயிரம்  செங்கல் 22,000 முதல் 23,000  வரை விற்றால் தான்  கட்டுப்படியாகும். ஆனால், லோடுக்கு 500க்கு மேல் உயர்த்த முடியவில்லை.  இதனால் ஒரு லோடுக்கு ₹3,000 வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: