தனியார்மயத்தை எதிர்த்து மாநகராட்சி ஊழியர்கள் கோட்டையை முற்றுகை

சென்னை: சென்னை மாநகராட்சியில் 9, 10 மற்றும் 13 ஆகிய மண்டலங்களில் துப்புரவு பணிகளை செய்வதற்கான ஒப்பந்தம் ஏற்கனவே தனியாருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 1, 2, 3, 7, 11, 12, 14 மற்றும் 15 ஆகிய மண்டலங்களிலும் துப்புரவு பணிகளை மேற்கொள்ளும் பணியை தனியாருக்கு கொடுக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்து, கடந்த ஆகஸ்ட் 20ம் தேதி டெண்டர் வெளியிட்டது. இந்த முடிவிற்கு அனைத்து தொழிற்சங்கங்கள் இணைந்து கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும் கடந்த மாதம் 26ம் தேதி 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சென்னை ரிப்பன் மாளிகையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து பொறுப்பு  ஆணையர் லலிதாவை சந்தித்து தனியார்மயத்ைத ரத்து செய்ய வேண்டும் என்று  மனு அளித்தனர்.

ஆனால் தனியார்மயத்தை நிறுத்த மாநகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் கோட்டையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். இதன்படி நேற்று 1000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலையிலிருந்து கோட்டை நோக்கி பேரணியாக சென்றனர். இவர்களை  சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே தடுத்து நிறுத்திய காவல் துறையினர் உள்ளாட்சித் துறை செயலாளரை சந்திக்க ஏற்பாடு செய்வதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் உள்ளாட்சித் துறை செயலாளர் அர்மிந்தர்சிங், ஆணையர் (பொறுப்பு) லலிதா, இணை ஆணையர் அலெக்ஸ் லீலா, சுகாதாரத்துறை இணை ஆணையர் மதுசூதனன் ரெட்டி  ஆகியோரை  சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: