முறையான பராமரிப்பு இல்லாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் பொலிவிழந்து வரும் முட்டம் கடற்கரை

குளச்சல் :  குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி கடற்கரை, திற்பரப்பு அருவி, சிதறால் மலைக்கோயில், முட்டம் கடற்கரை ஆகியவை முக்கிய சுற்றுலா தலங்களாக விளங்குகிறது. முட்டம் கலங்கரை விளக்கின் எதிரே கடற்கரை பகுதியில் உள்ள யானை போன்ற பாறைக்கூட்டம் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்கிறது. இந்த கடற்கரை பகுதியில் ஏராளமான திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இதனால் தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். இங்கு அடிப்படை வசதிகள் செய்யப்படாததால் பயணிகள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

alignment=

இதனால் முட்டம் கடற்கரையின் அழகை முழுமையாக ரசிக்க முடியவில்லை. இந்த குறைகளை போக்கும் வகையில் கடந்த 2003ம் ஆண்டு மத்திய சுற்றுலாத்துறை முட்டம் கடற்கரையில் மேம்பாடு பணிகளுக்கு ₹1 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. இந்த நிதியில் பாறைகளுக்கும், மணற்பரப்பிற்கும் இடையே சிமெண்ட் தளங்கள், பெஞ்சுகள், படிக்கட்டுகள், சோலார் விளக்குகள், ஆடை மாற்றும் அறைகள், சிமெண்ட் குடில்கள், கடைகள், குடிநீர் வசதிகள் ஏற்படுத்த திட்டமிடப்பட்டது.

வேகமாக நடந்து வந்த மேம்பாட்டு பணிகளில் தொய்வு ஏற்பட்டது. பின்னர் நாளடைவில் பணிகள் அனைத்தும் கிடப்பில் போடப்பட்டது. இதனால் கோடிகள் ெசலவழித்து கட்டிய கட்டிடங்கள் அனைத்தும் உடைந்து சேதமடைய தொடங்கின. குறிப்பாக ஆபத்தான பாறைகளிடையே அமைக்கப்பட்ட தடுப்பு வேலிகள் உப்புக்காற்றில் பலத்த சேதமடைந்தன. இது பாறை மீது ஏறி கடலை ரசிக்கும் சுற்றுலா பயணிகளுக்கு பெரும் ஆபத்தாக உள்ளது.
alignment=

ஆர்வ மிகுதியில் அபாய பாறையில் உடைந்த தடுப்பு வேலியை தாண்டும் சிலர் மரணத்தை தேடிக்கொள்கின்றனர். இதனால் சுற்றுலா பயணிகளின் வருகையும் நாளுக்கு நாள் குறைய துவங்கி உள்ளது. கடந்த 4 வருடங்களுக்கு முன் தென்காசியை சேர்ந்த 2 ேபர் பாறையில் வழுக்கி கடலில் விழுந்ததில் பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவத்திற்குபின் வெள்ளிச்சந்தை காவல் நிலையம் சார்பில் ஆபத்தான பாறை பகுதியிலும், நுழைவு வாயிலிலும் எச்சரிக்கை அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டது.

இதுபோல் கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்பும் பாறை மீது நின்று செல்பி எடுத்தபோது 2 இளைஞர்கள் வழுக்கி கடலில் விழுந்தனர். அதில் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார். மற்றொருவரின் உடல் இன்னும் கிடைக்கவில்லை. இதையடுத்து காவல் நிலையம் சார்பில், செல்பி எடுக்க இது பாதுகாப்பான இடம் அல்ல என மீண்டும் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது.

ஒரு பக்கம் உப்புக்காற்றில் சோலார் விளக்கு பேனல் போர்டுகள், கம்பங்கள், குடிநீர் தொட்டி பைப்புகள் நாசமாகி உருத்தெரியாமல் போய் உள்ளது. மறுபக்கம் சிமெண்ட் குடில்களிலிருந்து மது அருந்தும் குடிமகன்கள் போதையில் குடில் மேற்கூரைகளை உடைத்துவிட்டனர். எனவே இங்கு சுற்றுலா மையத்தை மேம்படுத்தும் வகையில் கிடப்பில் போடப்பட்டுள்ள பணிகளை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றி முட்டம் கடற்கரையை புதுப்பொலிவு பெற செய்ய வேண்டும் என சுற்றுலா பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

சூரிய அஸ்தமனம் காணும் வசதி

2012ம் ஆண்டு அப்போதைய மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் முட்டம் கலங்கரை விளக்கு கடற்கரை பகுதியை சுற்றுலா மையமாக அறிவித்தார். இங்கு சூரியன் மறையும் காட்சி கன்னியாகுமரியில் தெரிவது போல் தெளிவாக தெரியும்.  ஆகவே சுற்றுலா பயணிகள் மாலை வரை காத்திருந்து சூரியன் மறையும் காட்சியை கண்டுகளித்து செல்கின்றனர். மேலும் கலங்கரை விளக்கை பொதுமக்கள் பார்வையிட இருந்து வந்த தடை கடந்த 4 வருடங்களுக்கு முன்பு நீக்கப்பட்டது. தினமும் மாலை 3 மணிமுதல் 5 மணிவரை கலங்கரை விளக்கை பார்வையிட அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொடரும் உயிர் பலி

சுமார் 20 வருடங்களுக்கு முன் இங்கு சுற்றுலா வந்த மாஜிஸ்திரேட் ஒருவர் பாறையிலிருந்து தவறி விழுந்து பலியானார். அதற்கு பிறகுதான் இங்கு பாறைகள் மீது தடுப்பு வேலிகள் அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் சேதமடைந்த தடுப்பு வேலிகள் பராமரிக்கப்படாததால் உயிர் சேதம் மீண்டும் தொடர்கிறது. 2010ம் ஆண்டில் 4 சுற்றுலா பயணிகளும், அடுத்த 3 வருடங்களில் தலா ஒரு சுற்றுலா பயணியும், 2014ல் 2 பயணிகளும் கடலில் தவறிவிழுந்து பலியாயினர். இறுதியாக கடந்த வருடம் நெல்லை கடையநல்லூரை சேர்ந்த சிவராமன் என்பவர் பலியானார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: