வெள்ளோடு கிராம கோயிலில் இருந்து மாயமான 8 கற்சிலைகளை மீட்டு குடந்தை கோர்ட்டில் ஒப்படைப்பு

கும்பகோணம்: வெள்ளோடு கிராமத்தில் உள்ள ராசா கோயிலில் மாயமான 8 கற்சிலைகளை மீட்டு கும்பகோணம் கோர்ட்டில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஒப்படைத்தனர்.

ஈரோடு மாவட்டம் வெள்ளோடு கிராமத்தில் 900 ஆண்டுகள் பழமையான ராசா கோயில் உள்ளது. இந்த கோயில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோயிலை இடித்து விட்டு வேறு இடத்தில் புதிய கோயில் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டது. அப்போது பழமையான கோயிலை இடிக்கக்கூடாது என்று திருச்சி ரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றார்.

இதனால் வெள்ளோடு ராசா கோயிலை இடிக்காமல் அதே பகுதியில் புதிய கோயில் கட்டப்பட்டது. அப்போது பழமையான கோயிலில் இருந்த 8 கற்சிலைகள் மாயமானது. இதுகுறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன்மாணிக்கவேலுவிடம் வெள்ளோடை சேர்ந்த பொன்தீபங்கர் புகார் செய்தார்.

பின்னர் 8 சிலைகளை திருடியதாக 11 பேர் மீது வழக்குப்பதிந்து போலீசார் விசாரித்தனர். இதையடுத்து ராசா கோயிலில் இருந்த 8 சிலைகளும் புதிதாக கட்டடப்பட்ட கோயிலில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து மசிரி அம்மன், பெரிய அண்ணா, கோயில் ஆத்தா அம்மன், கன்னிமார் என்ற சப்த கன்னியர், உச்சகுமார சுவாமி, விநாயகர், சாக்கம்மன், சாம்புவான் உள்ளிட்ட 8 கற்சிலைகளையும் மீட்டு கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று ஒப்படைத்தனர். இதையடுத்து சிலைகளை பார்வையிட்டு ராசா கோயில் செயல் அலுவலர் ரமணிகந்தனிடம் நீதிபதி அய்யப்பன்பிள்ளை ஒப்படைத்தார். இதைதொடர்ந்து, ராசா கோயிலுக்கு பாதுகாப்பாக 8 கற்சிலைகள் கொண்டு செல்லப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: