ராஜராஜ சோழன், லோகமாதேவி சிலைகளுக்கு உரிமை கோரி குஜராத் அறக்கட்டளை மனு: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு பதில் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தஞ்சை பெரிய கோயிலில் காணாமல் போய் மீட்கப்பட்ட 2 சிலைகள் தங்களுடையதுதான் என்று அறிவிக்கக் கோரி குஜராத் மாநிலத்தில் உள்ள சாராபாய் பவுண்டேஷன்  தாக்கல் செய்த மனுவுக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு பதில் தருமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  தஞ்சாவூர் பெரிய கோயிலில் இருந்த ராஜராஜசோழன் மற்றும் ராணி லோகமாதேவி ஆகியோரின் சிலைகள் கடந்த 1960ல் காணாமல் போயின. 56 சென்டி மீட்டர் மற்றும் 46 சென்டிமீட்டர் உயரம்  கொண்ட இந்த சிலைகள் குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள சாராபாய் பவுண்டேஷன் என்னும் அறக்கட்டளையில் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தன. இதையடுத்து, இந்த சிலைகளை கடத்தி சட்டவிரோதமாக வைத்திருப்பதாக, தமிழக முன்னாள் அமைச்சர் சுவாமிநாதன் அளித்த புகாரின்படி, சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர்  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதன்படி, குஜராத் சென்ற சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ராஜராஜசோழன், ராணி லோகமாதேவி ஆகிய சிலைகளை மீட்டு வந்தனர். இந்நிலையில், தங்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கோரி சாராபாய் பவுண்டேஷன் பிரதிநிதியும், இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் தந்தை எனப்படும் விக்ரம் சாராபாயின்  சகோதரியுமான கிரா சாராபாய் (94) சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், இந்த 2 சிலைகளும் கடந்த 1942 முதல் தங்களிடம் உள்ளன. இந்நிலையில், சமீபத்தில் வந்த தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் இந்த சிலைகளை  எடுத்துச் சென்று விட்டனர்என்று கூறப்பட்டிருந்தது.  இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய சிறப்பு டிவிஷன் பெஞ்சில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சார்பில், பதில் தர கால  அவகாசம் வேண்டும் என்று கோரப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கில் 6 வாரத்திற்குள் பதில் தருமாறு தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு உத்தரவிட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: