சென்னையில் முதல் முறையாக யானைகவுனியில் 1 கோடியில் 300 கண்காணிப்பு கேமராக்கள்: போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்

சென்னை: சென்னையில்  குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் முதன் முறையாக யானைகவுனி பகுதியில் 300  கண்காணிப்பு கேமராக்களை கமிஷனர் விஸ்வநாதன் நேற்று தொடங்கி வைத்தார். சென்னையில் குற்ற  சம்பவங்களை தடுக்க காண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என்று சமீபத்தில் கமிஷனர் உத்தரவிட்டார். அதன்படி, அந்தந்த காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி கண்காணிப்பு  கேமராவை பொருத்தி வருகின்றனர். யானைகவுனி பகுதியில் 30 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இங்கு நாள் தோறும் 2  லட்சம் பேர் வியாபார ரீதியாக வந்து செல்கின்றனர்.

மும்பை முதல் தங்க மார்க்கெட் பகுதியாக விளங்குகிறது. இந்தியாவிலேயே 2வது பெரிய தங்க  மார்க்கெட் இடமாக யானை கவுனி பகுதி விளங்குகிறது. இந்நிலையில் சென்னை முதன் முறையாக யானைகவுனி காவல்  நிலையத்திற்கு உட்பட்ட 78 தெருக்களில் 300 சிசிடிவி புதிதாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் துவக்க நிகழ்ச்சி நேற்று மாலை யானைகவுனி காவல் நிலையத்தில் நடைபெற்றது. சென்னை மாநகர  போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் கலந்து கொண்டு, கண்காணிப்பு கேமராக்களை தொடங்கி வைத்தார்.

 7 இடங்களில் உருவங்கள் பதிவாகும் நவீன கேமரா

கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னையில்  முதன் முறையாக யானை கவுனி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ₹1  கோடி மதிப்பில் 300 கண்காணிப்பு கேமராக்கள்  பொருத்தப்பட்டுள்ளன. இதில், 200   கேமராக்கள் ஸ்பீக்கர் வசதியுடன்  அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம்  பொதுமக்கள், குற்ற சம்பவங்கள் ஏதேனும் நடந்தால் அவர்கள் சாலையில் இந்த  கேமராவில் பொருத்தப்பட்ட  மைக்கின் முன்பு பேசினால் கட்டுப்பாட்டு அறைக்கு  அது கேட்கும். கட்டுப்பாட்டு அறையில் அது புகாராக பதிவாகிவிடும்.

மேலும்  இந்த மைக்குடன் கூடிய கேமரா முக்கிய சாலைகளில் வைக்கப்பட்டுள்ளது. ஒரு  தெரு வழியாக ஒரு உருவம் செல்லும் போது அவர்களுடைய உருவங்கள் 7 இடங்களில்  பதிவாகிவிடும். மேலும், இங்கு  பொருத்தப்பட்டுள்ள நவீன கேமராவின் காட்சிகளை  பெரிதுபடுத்தி துல்லியமாக பார்க்கும் வசதி இந்த கேமராக்களுக்கு உண்டு. சென்னையில்  தற்போது முதன் முறையாக யானை கவுனி காவல் நிலையத்தில்  தொடங்கப்பட்டுள்ளது.   படிப்படியாக சென்னை முழுவதும் இந்த வசதி விரிவு படுத்தப்படும். இதன் மூலம்  குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை எளிதில் பிடித்து அவர்கள் மீது உடனடி  நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.  இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: