எண்ணூர் துறைமுகத்திற்கு வந்த மலேசிய மணல் நாளை முதல் முன்பதிவு: கூடுதலாக 1 லட்சம் டன் மணல் இறக்க முடிவு

சென்னை: மலேசியாவில் இருந்து எண்ணூர் துறைமுகத்திற்கு வந்துள்ள மணல் நாளை முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்யப்படுகிறது. தமிழகத்தில் மணல் தட்டுப்பாட்டை போக்க வெளிநாட்டில் இருந்து மணலை இறக்குமதி செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. இதை தொடர்ந்து, ரூ.548 கோடி செலவில்  30 லட்சம் மெட்ரிக் டன் மணலை இறக்குமதி செய்ய பொதுப்பணித்துறை சார்பில் கடந்த மார்ச் 6ம் தேதி டெண்டர் கோரப்பட்டது. இந்த டெண்டரில் ‘செட்டிநாடு  லாஜிஸ்டிக்ஸ், நாலேஜ் இன்ப்ரா ஸ்ரெக்சர்ஸ் சிஸ்டம்ஸ், இனோ ரிதம் எனர்ஜி லிமிடெட்’ ஆகிய 3 நிறுவனங்கள் கலந்து கொண்டன. இதில், ஹைதராபாத்தை சேர்ந்த இனோ ரிதம் எனர்ஜி லிமிடெட் என்ற நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது. இந்த நிலையில், மலேசியாவின் பஹாங் மாநிலம் பீகான்  துறைமுகத்தில் இருந்து 56,750 மெட்ரிக் டன் ஆற்று மணல் எம்.வி.அவ்ரலியா என்ற கப்பல் மூலம் எண்ணூரில் உள்ள காமராஜர் துறைமுகத்திற்கு கடந்த 23ம் தேதி  அதிகாலையில் வந்து சேர்ந்தது.

இந்த மணலை கப்பலில் இருந்து இறக்கும் பணி நடந்து வருகிறது.  இதை தொடர்ந்து நாளை மாலை 4 மணி முதல் இந்த மணல்  ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யப்படுகிறது. முன்னதாக, www.tnsand.gov.in என்ற இணையதளத்தில் இதற்கான அறிவிப்பு நாளை காலை  வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மணல் தட்டுபாட்டால் கட்டுமான பணிகள் முடங்கி போய் உள்ள நிலையில் இந்த மணல் விற்பனை  செய்யப்படுகிறது. எனவே, ஒரு சில தினங்களிலேயே மணல் விற்று விட வாய்ப்புள்ளது. எனவே தான், கூடுதலாக 1 லட்சம் டன் மணல் மலேசியாவில் இருந்து  இறக்கப்படுகிறது. விரைவில் அந்த மணல் எண்ணூர் துறைமுகத்திற்கு வந்து சேரும் என்று தெரிகிறது என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: