மாணிக்கவாசகர் குறித்து கருத்து தெரிவித்த பல்கலைப் பேராசிரியரை மிரட்டிய கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: மாணவர்கள் கோரிக்கை

சென்னை: மாணிக்க வாசகர் குறித்து கருத்து தெரிவித்த பேராசிரியரை மிரட்டிய கும்பல் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்கலைக்கழக துணைவேந்தரிடம் மாணவர்கள் வலியுறுத்தி உள்ளனர். இதுதொடர்பான செய்தியாளர் சந்திப்பு சென்னை நிருபர்கள் சங்கத்தில் நேற்று நடந்தது. அப்போது சென்னைப் பல்கலைக்கழக சைவசித்தாந்த துறையின் மாணவரும் தமிழ் தேசிய மாணவர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான  கோபிநாதன் மற்றும் மாணவர்கள் சிலர் கூறியதாவது: சென்னைப் பல்கலைக்கழகத்தை சேர்ந்த முனைவர் பத்மாவதி, ‘‘மாணிக்க வாசகர் காலமும் கருத்தும்’’ என்ற தலைப்பில் கடந்த மே 17ம் தேதி ஒரு புத்தகத்தை வெளியிட்டார். அதில் கூறப்பட்டுள்ள செய்திகள் மீது சென்னைப் பல்கலைக்கழக சைவ சித்தாந்த துறையின் பேராசிரியர் நல்லூர் சரவணன் என்பவர் கருத்து தெரிவித்து இருந்தார். ஆனால் பாஜ கட்சியை சேர்ந்த எச்.ராஜா மற்றும் அவரது ஆதரவாளர்கள் சிலர் மேற்கண்ட ஆய்வு நூலின் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் ஆய்வு நூலை வெளியிட்ட நல்லூர் சரவணனை மிரட்டுவது, பல்கலைக் கழகத்தில் இருந்து பணி நீக்கம் செய்யக் கோருவது மட்டும் அல்லாமல் மறைமுகமாக பேராசிரியரை மிரட்டும் செயலிலும் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 18ம் தேதி ஒரு கும்பல் சென்னைப் பல்கலைக் கழகத்தின் உள்ளே அத்துமீறி நுழைந்து போராட்டம் நடத்தியதுடன் பேராசிரியர் நல்லூர் சரவணன் மீது பல்கலைக் கழக துணை வேந்தரிடம் மனுவும் கொடுத்துள்ளனர். அந்த மனுவை பெற்ற துணை ேவந்தர், பேராசிரியர் நல்லூர் சரவணன் விளக்கம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். அத்துமீறி பல்கலைக் கழகத்தில் நுழைந்த கும்பல் மீது துணை வேந்தர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பேராசிரியருக்கு போலீசார் பாதுகாப்பு கொடுக்க வேண்டும். அந்த கும்பல் மீது வழக்கு தொடர வேண்டும். இல்லை என்றால் தமிழகம் முழுவதும் மாணவர்களை ஒன்று திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து அறிவிப்போம். இவ்வாறு கோபிநாதன் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: