உலகின் அழகான ஏர்போர்ட்டாகிறது திருச்சி 951 கோடியில் புதிய முனைய பணிகள் : 2021 செப்டம்பரில் செயல்பாட்டுக்கு வரும்

திருச்சி : திருச்சி விமான நிலையத்தில் புதிய முனையம் கட்டுவதற்கான மாதிரி வரைபடம் மற்றும் கட்டுமான வடிவமைப்பின் அறிமுக விழா நேற்று நடந்தது. விமான நிலைய பழைய முனையத்தில் நடந்த விழாவில் விமானநிலைய இயக்குநர் குணசேகரன், டெல்லி தலைமையிடத்து கட்டுமான பிரிவு பொதுமேலாளர் சஞ்சீவ் ஜிண்டல் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது இருவரும் கூட்டாக  அளித்த பேட்டி: திருச்சி விமான நிலைய புதிய முனையம் ரூ.951.34 கோடி மதிப்பில் 61,634 சதுர அடி பரப்பளவில் வருடத்திற்கு 3.6 மில்லியன் பயணிகளை கையாளக்கூடிய வகையில், பல சிறப்பு அம்சங் களுடனும், அதிக தொழில்நுட்ப வசதிகளுடன் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட உள்ளது. இதற்காக மண் பரிசோதனை, சுற்றுசூழல் சான்றிதழ் உள்ளிட்ட பணிகள் ஏற்கனவே துவங்கப்பட்டுவிட்டது.

புதிய முனையம் அமைப்பதற்காக முதற்கட்டமாக ரூ.35 கோடியில் ஏற்கனவே ஏர்பிரான் அமைக்கும் பணி துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. 2வது கட்டமாக டெல்லி, மும்பை விமானநிலையங்களை காட்டிலும் உலக தரத்தில் புதிய முனையம் கட்டப்பட உள்ளது. 3வது கட்டமாக 45 மீட்டரில் ஏடிசி அமைக்கப்பட உள்ளது.

புதிய முனையம் கட்ட நவம்பர் மாதம் பணிகள் துவங்கப்பட்டு வரும் செப்டம்பர் 2021க்குள் பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். புதிய முனையத்தில் திருச்சியின் பாரம்பரிய தோற்றத்தை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கிரியா 4 ஸ்டார் அந்தஸ்து பெற்றுள்ளது. மாற்றுதிறனாளிகள், வயதுமுதிர்தோர் மற்றும் குழந்தைகளுக்கு ஏதுவாக சிறப்பம்சங்களுடன் திகழும்.

மேலும்  48 சோதனை கவுன்டர்களும், இமிகிரேசன் பிரிவுக்கு 40, சுங்க துறைக்கு 3 கவுன்டர்களும், பயணிகளுக்கு போர்டிங் கவுன்டர் என தனிதனியாக அமைக்கப்பட உள்ளது. 300 கிலோ வாட் சோலார் மின்சாரம் தயாரிக்கப்பட்டு இதன் மூலம் விமானநிலையம் முழுவதும் எல்இடி விளக்குகள் பயன்படுத்தப்படும்.  இதற்காக விமான நிலைய  வளாகத்திலேயே 300கே.வி அல்லது 500 கேவி திறன் கொண்ட நிலையம் ஏற்படுத்தப்படும். புதிய முனையத்தில் 100 சதவீதம் தானியங்கி இயந்திரமாக செயல்படும். தற்போது உள்ள முனையத்தை காட்டிலும் 5 மடங்கு வசதிகளுடன்,  பீக் நேரத்தில் 3000 பயணிகளை கையாளக்கூடிய வகையில், 1000 வாகனங்கள் நிற்ககூடிய வகையில் கார் பார்க்கிங் அமைக்கப்படுகிறது.

சென்னை விமான நிலையத்திற்கு அடுத்தபடியாக திருச்சி விமான நிலையம் சரக்கு போக்குவரத்து சிறந்து விளங்குவதால் சரக்கு முனையத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளது. தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 340 ஏக்கர் நிலம் 6 மாத காலத்திற்குள் திருச்சி விமான நிலையம் வசம் ஒப்படைக்கப்பட்டு ரன்வே விரிவாக்கம் செய்யும் பணி நடைபெறும். பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள நிலம் முறையான இழப்பீடு வழங்கப்பட்டு பணிகள் துவங்கப்படும். சர்வதேச விமான நிலையத்துக்கான அளவுகோல், அதற்கான வசதிகள், பயணிகளின் தேவைகள், எதிர்பார்ப்பு ஆகியவற்றுடன் திருச்சியை சுற்றியுள்ள பகுதிகளின் கலாச்சாரம், தமிழர் பண்பாடு கலைநயம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் வகையில் இந்த முனையம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக உலகளவில்  நடைபெறும் சிறந்த வடிவமைப்புக்கான  போட்டியில் பங்கேற்க திருச்சி விமான நிலைய வடிவமைப்பும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.  இத்திட்டத்தை  அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கக்கூடிய 55க்கும் மேற்பட்ட பொறியாளர்கள் தொடர்ச்சியாக உழைத்து திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையத்தை வடிவமைத்துள்ளனர். இது உலகின் மிக அழகான விமான நிலையங்களுள் ஒன்றாக திகழும் என்றார். கட்டுமான நிறுவனத்தின் தலைமை செயலாக்க அலுவலர் விகாஷ்சோப்ரா, திட்ட இயக்குநர் ஜிசி ரெட்டி, திட்ட மேலாளர் சந்தோஷ்குமார் உள்ளிட்ட விமானநிலைய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: