முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தை தேசிய மருத்துவ பாதுகாப்பு திட்டத்துடன் ஒருங்கிணைந்து செயல்படுத்தும் திட்டம்: அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்

சென்னை: தமிழகத்தில் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை தேசிய மருத்துவ பாதுகாப்பு திட்டத்துடன் ஒருங்கிணைந்து செயல்படுத்தும் திட்டத்தை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று தொடங்கி வைத்தார். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா திட்டம் (தேசிய மருத்துவ பாதுகாப்பு திட்டம்) பிரதமரால் நேற்று நாடு முழுவதும் தொடங்கி வைக்கப்பட்டது.  இதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில்  முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்துடன் ஒருங்கிணைக்கப்பட்ட இத்திட்டத்தினை மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் நேற்று தமிழ்நாட்டில் தொடங்கி வைத்தார்.  இதன் முதற்கட்டமாக இத்திட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கு காப்பீட்டு அடையாள அட்டை மற்றும் மருத்துவ சிகிச்சைக்கான முன் அனுமதியினையும் அவர் வழங்கினர். தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது: தமிழ்நாட்டில் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தையும்,  பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா, தேசிய மருத்துவ பாதுகாப்புத் திட்டத்துடன்  ஒருங்கிணைத்து மிகச்சிறப்பாக செயல்படுத்த தமிழக அரசு முடிவெடுத்தது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த 11ம் தேதி கையெழுத்தானது.

 இத்திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் சமூக பொருளாதார சாதி வாரியான கணக்கெடுப்பு புள்ளிவிவரப் பட்டியல் படி தமிழகத்தில் உள்ள 77 லட்சம் ஏழை குடும்பங்களிலுள்ள சுமார் 2.85 கோடி நபர்கள் இனி ஆண்டிற்கு ரூ.5  லட்சம் வரையிலான கட்டணமில்லா இலவச மருத்துவ சேவையை இத்திட்டத்தின் கீழ் பெறமுடியும்.மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் உள்ள அனைத்து பயனாளிகளும் இனி ஆண்டிற்கு ரூ.5 லட்சம் வரையிலான மருத்துவ காப்பீட்டினை  பெற முடியும்.

மேலும் உயர் சிறப்பு சிகிச்சைகளான காது நுண் எலும்பு கருவி பொருத்தும் சிகிச்சை, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, எலும்பு மஜ்ஜை மற்றும் ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சை,  இருதய மாற்று அறுவை சிகிச்சை, நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை மற்றும் செவிப்புல மூளை தண்டு உள்வைப்பு அறுவை சிகிச்சை, ஆகியவற்றிற்கு ரூ.25 லட்சம் வரையிலும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக்  காப்பீட்டு திட்ட தொகுப்பு நிதியிலிருந்து வழங்கப்பட்டு வருவதை இத்திட்டத்தில் இணைக்கப்படும். தகுதியுள்ள அனைத்து பயனாளிகளுக்கும் தொடர்ந்து வழங்கிட வழிவகை செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: