ரஃபேல் விமான விவகாரம்: ரிலையன்ஸ் நிறுவனத்தை தேர்வு செய்ததில் ஃபிரான்ஸ்க்கும், இந்தியாவுக்கும் தொடர்பில்லை...டசால்ட் விளக்கம்

பிரான்ஸ்: ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தை கூட்டாளியாக தேர்வு செய்ததில் ஃபிரான்ஸ் அரசுக்கோ இந்திய அரசுக்கோ தொடர்பில்லை என டசால்ட் நிறுவனம் கூறியுள்ளது. ரஃபேல் போர் விமான  ஒப்பந்தத்தில் ஊழல்களும் முறைகேடுகளும் நடைபெற்றிருப்பதாகவும், தொழிலதிபர் அனில் அம்பானி, பல்லாயிரம் கோடி ரூபாய் ஆதாயம் பெறும் வகையில், ரஃபேல் ஒப்பந்தத்தை மத்திய பாஜக அரசு  மாற்றியமைத்திருப்பதாகவும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.

இந்நிலையில், இந்திய அரசு முன்மொழிந்ததன் அடிப்படையில்தான், அனில் அம்பானி நிறுவனத்துடன் டசால்ட் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தியது என்று ஃபிரான்ஸ் முன்னாள் அதிபர் பிராங்காய்ஸ் ஹோலண்டே நேற்று  கூறியிருந்தார். வேறு வழி இல்லாததால், இந்திய அரசு முன்மொழிந்த அந்த நிறுவனத்துடன் டசால்ட் கூட்டு சேர வேண்டியதாயிற்று என்றும் அவர் தெரிவித்திருந்தார்.இதன் மூலம் தாங்கள் கூறிய குற்றச்சாட்டு  உண்மையாகியிருப்பதாக ராகுல்காந்தி கூறியுள்ளார்.

இந்நிலையில், பிரான்சின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஃபிரான்ஸ் நிறுவனங்கள் இந்தியாவில் தொழிற்துறை கூட்டாளிகளை தேர்வு செய்ததில் அல்லது தேர்வு செய்வதில்  ஃபிரான்ஸ் அரசுக்கு எவ்விதத்திலும் தொடர்பும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃபிரான்ஸ் நிறுவனங்கள் பொருத்தமான இந்திய நிறுவனங்களை கூட்டாளியாக தேர்வு செய்வதற்கு முழு சுதந்திரம் உண்டு என்றும் அதில்  கூறப்பட்டுள்ளது.

இந்திய சட்டங்களுக்கு உட்பட்டு, இந்திய பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் பலவற்றுடன் ஃபிரான்ஸ் நிறுவனங்கள் ஏற்கெனவே ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது என்றும் அந்த அறிக்கையில்  குறிப்பிடப்பட்டுள்ளது. 36 ரஃபேல் விமானங்களை வாங்குவதற்காக இந்திய, ஃபிரான்ஸ் அரசுகள்  இடையே 2016-ம் ஆண்டில் செய்யப்பட்ட ஒப்பந்தத்தை பொறுத்தவரை, தரமான விமானங்களை, ஒப்பந்தப்படி வழங்குவதை  உறுதிப்படுத்துவது மட்டும்தான் பிரான்ஸ் அரசின் பொறுப்பு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், டசால்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய அரசின் மேக் இன் இந்தியா கொள்கை மற்றும் பாதுகாப்புத்துறைக்கான கொள்முதல் நடைமுறை ஆகியவற்றிற்கு இணக்கமாகவே, ரிலையன்ஸ் நிறுவனம்  தாங்களால் தேர்வு செய்யப்பட்டதாக டசால்ட் நிறுவனம் கூறியுள்ளது. இந்தியாவின் ரிலையன்ஸ் நிறுவனத்தை கூட்டாளியாக சேர்த்துக் கொள்வது என்பது, முழுக்க முழுக்க டசால்ட் நிறுவனத்தின் தேர்வு என்றும் அதில்  கூறப்பட்டுள்ளது.

இந்த கூட்டின் மூலம் 2017-ம் ஆண்டு பிப்ரவரியில் டசால்ட் ரிலையன்ஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனம் உருவாக்கப்பட்டது என்றும், இரு நிறுவனங்களும் இணைந்து ஃபால்கன் மற்றும் ரஃபேல் விமானங்களுக்கான பாகங்களை தயாரிக்க  நாக்பூரில் தொழிற்சாலையை உருவாக்க முடிவு செய்தன என்றும் டசால்ட் தெரிவித்துள்ளது.

ரிலையன்ஸ் உடன் மட்டுமல்லாது, BTSL, DEFSYS, Kinetic, Mahindra, Maini, SAMTEL போன்ற இந்திய நிறுவனங்களுடனும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும், இதுபோல வேறு பல  நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் டசால்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: