‘வர்தா, ஒகி’ ஐ தொடர்ந்து வங்க கடலில் ‘தயே’ புயல் உருவானது: தமிழகத்துக்கு பாதிப்பா?

சென்னை: வங்க கடலில் ஒடிசா அருகே நேற்று நள்ளிரவு புயல் உருவானது. இந்த புயலுக்கு ‘தயே’ என்று இந்திய வானிலை ஆய்வு மையம் பெயரிட்டுள்ளது. கிழக்கு மத்திய வங்க கடல் பகுதியில் சில தினங்களுக்கு முன் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்தது. நேற்று ஒரே நாளில் அந்த காற்றழுத்தம் சில மணி நேர இடைவெளியில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற்றது. நேற்று மாலை 5.30 மணி நிலவரப்படி மத்திய மேற்கு வங்க கடலில் இருந்து மணிக்கு 23 கி.மீ வேகத்தில் காற்றழுத்தம் நகர்ந்து கடலோர ஆந்திராவின் கிழக்கு கலிங்கப்பட்டினத்தில் இருந்து 170 கி.மீ தொலைவிலும், தென்கிழக்கு கோபால்பூரில்(ஒடிசா மாநிலம்) இருந்து 130 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டிருந்தது. பின்னர் நள்ளிரவு 12 மணிக்கு மேல் காற்றழுத்தம் புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ‘’தயே’’ என பெயரிட்டுள்ளது. புயல் காரணமாக ஒடிசா, ஆந்திரா, தெலங்கானா, மேற்குவங்கம், சத்தீஷ்கர் ஆகிய மாநிலங்களில் கடல் பயங்கர சீற்றத்துடன் காணப்பட்டது. அங்கு மணிக்கு 70 முதல் 90 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசி வருகிறது. ஒடிசா மற்றும் கடலோர ஆந்திரா பகுதிகளில் இன்று மிக, மிக, பலத்த மழை பெய்யும் என்பதால் அங்கு ரெட் அலர்ட்(எச்சரிக்கை சிக்னல்) விடுக்கப்பட்டுள்ளது.

இன்று தயே புயல் படிப்படியாக வலுவிழுந்து தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், தாழ்வு மண்டலமாகவும் மாறும். நாளை முற்றிலும் வலுவிழந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலால் தமிழகத்துக்கு பாதிப்பில்லை என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

அதன்படி தமிழகத்தில் இன்று புயல் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும் சில இடங்களில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. மீனவர்கள் இன்று கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் கடைசியாக கடந்த 2016 டிசம்பரில் வர்தா புயலும், 2017 டிசம்பரில் ஓகி புயலும் உருவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: