களக்காடு வனப்பகுதியில் கணக்கெடுப்பு பணி நிறைவு: கால்தடங்கள் - எச்சங்கள் அதிகாரிகளிடம் ஒப்படைப்பு

களக்காடு: களக்காடு புலிகள் காப்பக வனப்பகுதியில் கடந்த 7 நாட்களாக நடந்து வந்த வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி நிறைவுபெற்றது.  கணக்கெடுப்பு குழுவினர் சேகரித்த புலிகள், சிறுத்தைகளின் கால்தடங்கள், எச்சங்களை வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக் கப்பட்டது. நெல்லை மாவட்டம், களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் 895 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் களக்காடு, முண்டந்துறை புலிகள் காப்பகம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் முதல் புலிகள் காப்பகம் என்ற பெருமையை பெற்ற இந்த காப்பக வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, சிங்கவால்குரங்கு, செந்நாய்கள், நீலகிரி வரையாடு, கடமான் உள்ளிட்ட அரியவகை விலங்கினங்கள் வசிக்கின்றன.

இதுபோல மூலிகை செடிகளும் உள்ளன. ஆண்டு தோறும் மலையில் வாழும் வனவிலங்குகள் குறித்து கணக்கெடுப்பு பணி நடைபெறுவது வழக்கம். அதன்படி நடப்பாண்டு பருவ மழைக்கு முந்தைய கணக்கெடுப்பு பணி கடந்த செப் 11ம் தேதி தொடங்கி ெதாடர்ந்து ஒருவாரம் நடந்தது. களக்காடு புலிகள் காப்பக கள இயக்குனர் அன்வர்தீன் உத்தரவின்படி துணை இயக்குனர் ஆரோக்கியராஜ் சேவியர் கணக்கெடுப்பை தொடங்கி வைத்தார். களக்காடு புலிகள் காப்பகத்திற்குற்பட்ட அப்பர் கோதையாறு, களக்காடு, திருக்குறுங்குடி வன சரகங்களில் 21 இடங்களில் கணக்கெடுப்பு  பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் கல்லூரி மாணவர்கள், இயற்கை நல ஆர்வலர்கள், வனத்துறை ஊழியர்கள் 100 பேர் கலந்து கொண்டனர்.

அப்பர்கோதையாறு வனசரகத்தில் 5 குழுவினரும், களக்காடு, திருக்குறுங்குடி வனசரகங்களில் தலா 8 குழுவினரும் என மொத்தம் 21 குழுவினர் வனவிலங்குகளை நேரில் காண்பது, அவைகளின் கால்தடங்கள், எச்சங்களை சேகரிப்பது, மற்றும் அடையாளங்களை கண்டெடுத்தல் முறைகளில் கணக்கெடுப்பு நடத்தினர். முதல் 3 நாட்கள் புலி, சிறுத்தை மற்றும் பிற மாமிச உண்ணிகள் குறித்தும், அடுத்த 3 நாட்கள் குளம்பினங்களின் நடமாட்டம் குறித்தும் கணக்கெடுப்பு மேற்கொண்டனர். இதில் புலி, சிறுத்தைகளின்  கால்தடங்கள், எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

மரங்களில் காணப்பட்ட புலிகளின் நககீறல்களையும் பதிவு செய்துள்ளனர். 7 நாட்களாக நடந்த கணக்கெடுப்பு முடிவடைந்ததை முன்னிட்டு இன்று காலை கணக்கெடுப்பு குழுவினர்  வனப்பகுதியில் இருந்து வெளியேறினர். அவர்கள் தாங்கள் சேகரித்த புலி, சிறுத்தைகளின்  கால்தடங்கள், எச்சங்களையும், புள்ளி விபரங்களையும் அறிக்கையாக தயார் செய்து  வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அடர்ந்த வனப்பகுதியில் தங்கியிருந்து கணக்கெடுப்பில் ஈடுபட்ட குழுவினர் காட்டெருமை, யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள்  நடமாட்டத்தை நேரில் கண்டதாக தெரிவித்தனர், சேகரிக்கப்பட்டுள்ள கால்தடங்கள் எச்சங்கள் மரபணு சோதனைக்காக  ஐதராபாத்தில் உள்ள டோராடூன்  வனவிலங்குகள் ஆராய்ச்சி  நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்றும், அங்கு நடைபெறும் ஆய்வின் முடிவில் வனவிலங்குகளின் எண்ணிக்கை குறித்து தெரியவரும் என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: