விராட் கோஹ்லி, மீராபாய் சானு.... கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரை

புதுடெல்லி: கேல் ரத்னா விருதுக்கு இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோஹ்லி, பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு ஆகியோரின் பெயர்கள் மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.விளையாட்டுத் துறையில் சாதித்தவர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருது ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது. இந்தாண்டுக்கான இவ்விருதுக்கு அனைத்து விளையாட்டு பிரிவுகள் சார்பில் வீரர், வீராங்கனைகள் பரிந்துரைக்கப்பட்டனர். இதில், இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோஹ்லி, பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு, பேட்மின்டன் வீரர் கிடாம்பி காந்த் ஆகியோரின் பெயர்களை விருதுக்கமிட்டி தேர்வு செய்து மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு பரிந்துரைத்திருப்பதாக நேற்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இவர்களில் விருது பெறுவோரை மத்திய விளையாட்டு துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் தேர்வு செய்வார்.

29 வயதாகும் கோஹ்லி 2016ம் ஆண்டிலும் கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். ஆனால் தேர்வுக்கமிட்டியின் இறுதிப் பட்டியலில் அப்போது கோஹ்லியின் பெயர் இடம் பெறவில்லை. தற்போது மிகச்சிறப்பான பார்மில் உள்ள கோஹ்லி ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் நம்பர்-1 வீரராக இருக்கிறார். கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும் பல்வேறு சாதனைகள் படைத்து வருகிறார். இம்முறை கோஹ்லி தேர்வு செய்யப்படும் பட்சத்தில், சச்சின் டெண்டுல்கர் (1997), மகேந்திர சிங் டோனி (2007) ஆகியோருக்குப் பிறகு கேல் ரத்னா விருதை பெறும் 3வது கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை பெறலாம். முன்னதாக கடந்த ஆண்டு கோஹ்லிக்கு பத்ம  விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.மீராபாய் சானு கடந்த ஆண்டு நடந்த உலக சாம்பியன்ஷிப் பளுதூக்குதலில் 48 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்தார். இந்த ஆண்டு நடந்த காமன்வெல்த் விளையாட்டிலும் அவர் தங்கத்தை கைப்பற்றினார். சமீபத்தில் நடந்த ஆசிய விளையாட்டில் காயம் காரணமாக சானு பங்கேற்கவில்லை. விருது வழங்கும் விழா வரும் 25ம் தேதி டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடக்க உள்ளது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்கி கவுரவிக்க உள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: