புரட்டாசி பிறந்தது; பூ விலை சரிந்தது

பாவூர்சத்திரம்: புரட்டாசி மாதம் பிறந்ததையடுத்து மார்க்கெட்டில் பூக்கள் விலையில் கடும் சரிவு ஏற்பட்டது.  நெல்லை மாவட்டம் கீழப்பாவூர் ஒன்றியத்தில் பல்வேறு பணப்பயிர்கள் விளைவிக்கப்பட்டாலும் சிவகாமிபுரம், வடக்கு சிவகாமிபுரம், கீழப்பாவூர், மேலப்பாவூர், மகிழ்வண்ணநாதபுரம், நாகல்குளம், பெத்தநாடார்பட்டி, சாலைப்புதூர்,  அடைக்கலப்பட்டணம், கழநீர்குளம், பட்டமுடையார்புரம், ஆண்டிப்பட்டி, கரும்புளியூத்து, வள்ளியம்மாள்புரம், கோவிலூற்று, பூலாங்குளம், தெற்கு மடத்தூர், வடக்கு மடத்தூர், மயிலப்புரம், புங்கம்பட்டி, வெங்கடாம்பட்டி,  வடமலைப்பட்டி, ஆவுடையானூர், ஆரியங்காவூர், செட்டியூர், கல்லூரணி, மடத்தூர், குலசேகரப்பட்டி போன்ற பகுதிகளில் விவசாயிகள் மல்லிகை, பிச்சி, கனகாம்பரம், சம்மங்கி, மஞ்சள் கேந்தி, துளசி, ரோஜா, முல்லைப்பூ, அரளி  போன்ற பூக்களை அதிகமாக சாகுபடி செய்கின்றனர். இங்கு விளையும்  பூக்கள் மாவட்டத்தின் பெரிய பூ மார்க்கெட்களில் ஒன்றான சிவகாமிபுரம் கமிஷன் கடைக்கு கொண்டு வரப்பட்டு ஏலம் விடப்படுகின்றன.

 இங்கிருந்து கேரளா, நெல்லை, சங்கரன்கோவில், தென்காசி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள வியாபாரிகள் தங்கள் தேவைக்கேற்ப வாங்கிச் செல்கின்றனர். நேற்று புரட்டாசி மாதம் பிறந்ததையடுத்து வரும் நாட்களில்  விசேஷ தினம் ஏதும் இல்லாத காரணத்தினால் விற்பனையில் மந்தம் ஏற்பட்டு நேற்று மார்க்கெட்டில் பூக்கள் விலை கடும் சரிவை சந்தித்தது.சிவகாமிபுரம் மார்க்கெட்டில் நேற்று முன்தினம் கிலோ ஒன்றுக்கு ₹400க்கு விற்ற மல்லிகை நேற்று 300க்கும், 300க்கு விற்ற பிச்சிப்பூ 200க்கும், கனகாம்பரம் ₹300லிருந்து ₹150க்கும், காக்காட்டான் ₹300லிருந்து ₹100க்கும்,  ₹100க்கு விற்ற அரளி ₹60க்கும், சம்பங்கி ₹80லிருந்து ₹60க்கும் விற்பனையானது. ஆனால் கேந்தி கிலோ ஒன்றுக்கு ₹50ம், முல்லை ₹300க்கும், கொழுந்து ₹50க்கும், கோழிப்பூ ₹20ம், துளசி ₹30ம், ரோஸ் ₹20க்கும் நேற்று  முன்தினம் விற்ற அதே விலையில் நேற்று விற்பனையானது. இதுகுறித்து பூ வியாபாரிகள் கூறுகையில், புரட்டாசி மாதம் பிறந்ததையடுத்து இனி வெள்ளிக்கிழமை மற்றும் சனி கிழமைகளில் மட்டுமே ஓரளவு பூ விற்பனை களைகட்டும். இதனால் இந்த மாதங்களில் மார்க்கெட்டிற்கு வரும்  பூக்களின் அளவு குறைவதோடு, விலையும் தொடர் சரிவையே சந்திக்கும் என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: