அகரம் ஊராட்சியில் ஒருமையில் பேசும் அதிகாரிகளை மாற்றக்கோரி பொதுமக்கள் போராட்டம்: போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு

தாம்பரம்: தாம்பரம் அடுத்த அகரம் ஊராட்சி அதிகாரியை கண்டித்து போராட்டம் செய்யப்போவதாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தாம்பரம் அடுத்த அகரம் ஊராட்சி பகுதியில் 9 வார்டுகள் உள்ளது. இதில் 15 ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் பொதுமக்களுக்குத் தேவையான குடிநீர் வசதி, மின்விளக்கு வசதி, குப்பை அகற்றும் வசதி என எந்த ஒரு பணிகளையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செய்து தருவது இல்லை என்று புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டால் அவர்கள் அலட்சியமாக பதில் அளிப்பதுடன் தகாத வார்த்தைகளால் திட்டுவதாக அப்பகுதி மக்கள் புகார் குற்றம்சாட்டுகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘அகரம் ஊராட்சி பகுதிகளில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக குடிநீர் வரவில்லை. வர்தா புயல் வந்தபோது எங்கள் பகுதியில் இருந்த மின்கம்பங்கள் அனைத்தும் சேதமடைந்து அன்றிலிருந்து தெருவிளக்குகள் எரியாமல் இருக்கிறது. இப்பகுதியில் உள்ள குப்பைகளை எடுத்துச்செல்ல அதிகாரிகள் யாரும் நடவடிக்கை எடுக்காமல் இருக்கின்றனர். குப்பை தொட்டி வசதி, குப்பையை எடுத்துச்செல்ல குப்பை வண்டி வசதி என்று எதுவும் இல்லை. இதனால் நாங்களே வண்டியை வைத்து எங்கள் சொந்த செலவில் குப்பைகளை அகற்றி வருகின்றோம்.  

இதுகுறித்து சிட்லபாக்கம் கிராம நிர்வாக அலுவலகத்தில் புகார் அளித்தும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் மனு கொடுத்தோம். ஆனால் இதுவரையிலும் எந்த ஒரு நடவடிக்களும் எடுக்கவில்லை. வரி செலுத்த போகும்போது கொஞ்சம் தாமதமானாலும் தகாத வார்த்தைகளில் பேசுகின்றனர். எனவே, இதுபோன்ற அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற 16ம் தேதி காமராஜபுரம் பேருந்து நிறுத்தம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளோம்’’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: