புதுடெல்லி: நாடு முழுவதும் எய்ட்சால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், தலைநகர் டெல்லியில் இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாதுகாப்பு இல்லாத பாலியல் உறவு மூலம் பரவும், எய்ட்சை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. மக்களிடமும் இதுபற்றி விழிப்புணர்வு ஏற்பட்டு வருவதால், தேசிய அளவில் கடந்த 3 ஆண்டுகளாக இதன் தாக்கம் குறைந்து வருகிறது. ஆனால், தலைநகர் டெல்லியில் மட்டும் 2017-2018ம் ஆண்டில் அதிகரித்து இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. நாட்டில், கடந்த 2015-16ம் ஆண்டில் 2 லட்சத்து 465 பேர் எய்ட்சால் பாதிக்கப்பட்டனர். 2016-17ம் ஆண்டில் இது 1 லட்சத்து 93 ஆயிரத்து 195 ஆகவும், 2017-18ல் 1 லட்சத்து 90 ஆயிரத்து 763 ஆகவும் குறைந்துள்ளது.
ஆனால், டெல்லியில் நிலைமை நேர் மாறாக உள்ளது. ஆனால், டெல்லியில் 2017-18ல் புதிதாக 6,563 பேர் எய்ட்சால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு முந்தைய ஆண்டில் இந்த எண்ணிக்கை 6,340 ஆக இருந்தது. டெல்லியில் ஒவ்வொரு ஆண்டும் எய்ட்ஸ் பாதிப்பால் 400 பேர் பலியாகின்றனர். தற்போது இந்த பாதிப்புக்காக 28,445 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மக்களவையில் கடந்த வெள்ளிக்கிழமை கேள்வி ஒன்றுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா அளித்த பதிலில், இந்த அதிர்ச்சி விவரம் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், ‘பல்வேறு மாநிலங்களில் இருந்து டெல்லிக்கு இடம் பெயர்ந்து வரும் மக்களால்தான் எய்ட்ஸ் பாதிப்பு அதிகமாகிறது’ என டெல்லி மாநில எய்ட்ஸ் தடுப்பு சமுதாய கூடுதல் திட்ட இயக்குநரும், டாக்டருமான பர்வீன் குமார் கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், ‘‘டெல்லியில் விரைவில் நடத்த உள்ள மாபெரும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில், எய்ட்சால் பாதிக்கப்பட்ட அனைவரையும் ஒன்று திரட்டி அறிவுரை வழங்க உள்ளோம். இது தொடர்பாக டெல்லியில் உள்ள எய்ட்ஸ் சிகிச்சைக்கான 89 ஒருங்கிணைந்த ஆலோசனை மற்றும் பரிசோதனை மையங்களுக்கு தகவல் அளித்துள்ளோம்’’ என்றார். மகாராஷ்டிரா முதலிடம்தேசிய அளவிலான எய்ட்ஸ் பாதிப்பில் மகாராஷ்டிரா மாநிலம் கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. 2017-2018ம் ஆண்டில் இம்மாநிலத்தில் 23 ஆயிரத்து 30 பேருக்கு எச்ஐவி தாக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. மேகாலயா, மிசோரம், திரிபுரா போன்ற மாநிலங்களில் பாதுகாப்பற்ற பாலியல் உறவு கொள்வது, ஒரே ஊசியை பயன்படுத்தி போதை மருந்து செலுத்திக் கொள்வது போன்ற காரணங்களால் எய்ட்ஸ் அதிகமாக பரவுகிறது என மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா கூறியுள்ளார்.
தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!