லாரி ஸ்டிரைக் 4வது நாளாக தொடர்கிறது: மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் என எதிர்பார்ப்பு

நாமக்கல்: நாடு முழுவதும் கடந்த 20ம் தேதி முதல் லாரி உரிமையாளர்கள் கால வரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். சுங்கசாவடிகளை அகற்றவேண்டும். டீசல் விலையை கட்டுபடுத்த வேண்டும். 3வது நபர் பிரீமியம் உயர்வை தடுக்கவேண்டும் போன்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. இன்று 4வது நாளாக லாரி ஸ்டிரைக் தொடர்கிறது. இதனால் தமிழகம் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் சரக்கு போக்குவரத்து அடியோடு முடங்கியுள்ளது. சென்னை, கோவை உள்ளிட்ட பெருநகரங்களில் காய்கறி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வரவேண்டிய கோழித்தீவனம், ஜவளி, தானியங்கள் போன்றவற்றின் வரத்து அடியோடு முடங்கியுள்ளது. இதுபோல தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு செல்லவேண்டிய பல கோடி மதிப்பிலான பொருட்கள் தேக்கம் அடைந்துள்ளது.

 

லாரி ஸ்டிரைக் தொடர்வதால் லாரி பட்டறைகள் வெறிச்சோடுகிறது. சுமார் 7 லட்சம் டிரைவர், கிளீனர்கள் மட்டும் இல்லாமல் லோடுமேன்கள், லாரி பட்டறை தொழிலாளர்கள் என பலரும் வேலை இழந்துள்ளனர். இதுகுறித்து மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் குமாரசாமி கூறுகையில், கடந்த காலங்களில் நடந்ததை விட இந்த முறை தமிழகத்தில் லாரி ஸ்டிரைக் தீவிரமாக நடந்து வருகிறது. மத்திய அரசின் பல்வேறு நடவடிக்கைகள் லாரி உரிமையாளர்களை பாதித்துள்ளது. அதனால் மத்திய அரசுக்கு எதிராக லாரி உரிமையாளர்கள் போராட்டம் மூலம் தங்களது உணர்வை வெளிப்படுத்தி வருகிறார்கள். பேச்சுவார்த்தை தொடர்பான அறிவிப்பு எதுவும் மத்திய அரசு இதுவரை வெளியிடவில்லை.

தமிழகத்தை போல வடமாநிலங்களிலும் லாரி ஸ்டிரைக் தீவிரமாக நடந்து வருகிறது. இதனுடைய பாதிப்பை மத்திய, மாநில அரசுகள் உணர்ந்துள்ளன. இதனால் மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு லாரி உரிமை யாளர்களை அழைக்கும் என எதிர்பார்க்கிறோம். தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் 95 சதவீத லாரிகள் நிறுத்தப்பட்டு விட்டன. இதன் மூலம் அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு ஏற்பட தொடங்கிவிட்டது. மத்திய அரசுடன் இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றால் மேற்கொண்டு எடுக்கவேண்டிய முடிவு குறித்து ஆலோசிக்கப்படும் என்றார். லாரி உரிமையார்களின் வேலைநிறுத்தத்துக்கு 2 நாட்கள் மட்டும் நாமக் கல்லில் உள்ள கோழிப்பண்ணையாளர்கள் ஆதரவு அளித்தனர்.

2 நாளில் பண்ணைகளில் சுமார் 4 கோடி முட்டைகள் தேக்கம் அடைந்தன. இதைத் தொடர்ந்து நேற்று இரவு முதல் முட்டை லாரிகள் இயக்கப்பட்டு வருவதாக கோழிப்பண்ணையாளர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். முட்டை அழுகும் பொருள் என்பதால் நீண்ட நாட்கள் பண்ணைகளில் வைத்திருக்க முடியாது என்பதால் முட்டை ஏற்றி செல்லும் லாரிகளை தடுக்ககூடாது என்பது லாரி உரிமையாளர்களுக்கும், கோழிப்பண்ணையாளர்களுக்கும் இடையே மறைமுக ஒப்பந்தமாக உள்ளது. இதனால் நேற்று இரவு நாமக்கல்லில் லோடு ஏற்றப்பட்ட முட்டை லாரிகள் வழியில் எங்கும் தடைபடாமல், கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு இன்று காலையில் சென்று சேர்ந்தது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: